துப்பாக்கியை காட்டி மிரட்டி கார் கடத்திய 3 பேர் சிக்கினர்
துப்பாக்கியை காட்டி மிரட்டி கார் கடத்திய 3 பேர் சிக்கினர்
ADDED : ஜூன் 17, 2025 08:31 PM
புதுடில்லி:துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சொகுசு காரை கடத்திச் சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தென்மேற்கு டில்லி குதுப் தொழிற்பேட்டை அருகே, ஷாஹீத்ஜித் சிங் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே, 15ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, 'டாடா ஹாரியர்' கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. கார் உரிமையாளர் தன் மனைவியுடன் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். காரில் அதன் டிரைவர் சாகர் மட்டும் இருந்தார்.
அப்போது, காரின் பின்புற கதவைத் திறந்து, மூன்று பேர் காருக்குள் ஏறினர்.
அதில் ஒருவர், துப்பாக்கியை சாகர் மீது வைத்து காரை ஓட்டச் சொன்னார். ஒரு மணி நேர பயணத்துக்குப் பின், அசோலா சாலையில் ஒரு ஓரத்தில் காரை நிறுத்தச் செய்து, சாகரிடம் இருந்த மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்தனர். பின், அவரை காரில் இருந்து கீழே இறக்கி விட்டு மூவரும் காரை கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து, கிஷன்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். காரை கடத்திச் சென்ற யோகேஷ் என்ற கமாண்டோ,34, அசோக் குமார்,40, மற்றும் பண்டி,25, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
கடத்தப்பட்ட கார், இரண்டு திருட்டு மொபைல் போன்கள், ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

