ADDED : அக் 24, 2026 08:59 PM
ஈரோடு: மழை வெள்ளத்தில் சிக்கிய மலை கிராமத்துக்கு, மாவட்ட நிர்வாகம் மூலம் உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று (அக்.,23) இரவில் மலைப்பகுதியான குன்றி, கர்கேகண்டி உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்ததால் பாலாறு மற்றும் மணியாச்சி பள்ளம் ஒடையில் கடுமையான வெள்ளப்போக்கு ஏற்பட்டது. அந்தியூர் தாலுகா பர்கூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மட்டிமரஹள்ளி, வேலம்பட்டி, குட்டையூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயம், கூலி வேலை செய்து வருகின்றனர். இக்கிராமத்தின் ஒரு புறம் பாலாறும், மற்றொரு புறம் மணியாச்சிப்பள்ளம் ஓடையும் செல்கிறது. இவற்றில் கடுமையான வெள்ளப்போக்கு இருந்ததால், இங்குள்ளவர்கள் நேற்று இரவு முதல், இன்று (அக்.,24) மாலை வரை கிராமத்தை விட்டு வெளியே வர இயலாமல் தவித்தனர்.
தகவல் அறிந்து, அந்தியூர் யூனியன், தாலுகாவை சேர்ந்த வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் அங்கு சென்று, அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கினர். வெள்ளம் வடிந்த பின், அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இருப்பினும், இன்றும் (அக்.,24) மழை பெய்ததால், அச்சமுடன் காணப்படுகின்றனர்.
