2500 அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கு 3 ஆண்டுகளாக தாமதம்
2500 அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கு 3 ஆண்டுகளாக தாமதம்
ADDED : மே 28, 2025 12:44 AM

மதுரை: 2500 அலுவலக உதவியாளர் நியமனம் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் 2 கட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
தமிழக அரசின் வருவாய்த்துறையில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நான்கு ஆண்டுகளாக போராடியும், 2023 செப்டம்பரில் முதற்கட்டமாக 564 இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. அத்துடன் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,500 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
பேரிடர் மேலாண்மை பிரிவில் 10 ஆண்டுக்கும் மேலாக இருந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் என 97 பணியிடங்கள் 2023 மார்ச்சில் கலைக்கப்பட்டன. ஒரு தாசில்தார் மட்டுமே அனைத்துப் பிரிவுகளையும் கவனிப்பதால் பணிப்பளு அதிகமாக உள்ளது. அரசின் அனைத்து திட்டங்களும் இத்துறை மூலமே நடக்கிறது. இப்பணிகளை அவசர கதியில் முடிக்க நிர்ப்பந்தம் செய்கின்றனர். அதை தவிர்த்து முக்கிய பணிகளுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும்.
கருணை அடிப்படையில் நியமனம் 25 சதவீதம் இருந்ததை 5 சதவீதமாக குறைத்தனர். அதனை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். இத்துறையில் பல புதிய திட்டங்களை செயல்படுத்த தினமும் 10 மணி நேரத்திற்கு மேல் உழைப்பதால், அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட தனிஊதியம் வழங்க வேண்டும்.
ஏற்கனவே அரசு ஒப்புதல் அளித்த 22 துணை கலெக்டர்கள், தாசில்தார்கள் பணியிடங்களை நிரப்பாததால் நில எடுப்பு, நெடுஞ்சாலை அமைப்பு பணிகள் பாதித்துள்ளன. எனவே தாமதமின்றி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். எல்லா தாலுகாவிலும் சான்றிதழ் வழங்க, திட்ட மனுக்களை கையாள கூடுதலாக ஒரு துணைத்தாசில்தார் நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
மாநில தலைவர் முருகையன், பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் கூறியதாவது: குரோம்பேட்டையில் நடந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினோம். மே 29 (நாளை) சென்னை வருவாய் நிர்வாக ஆணையரிடம் முறையீடு செய்வது, அடுத்து ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் 24 மணி நேரம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்துள்ளோம் என்றனர்.