கனகபுராவில் விமான நிலையம் 30 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு
கனகபுராவில் விமான நிலையம் 30 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு
ADDED : ஏப் 10, 2025 04:58 AM
பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாரின் சொந்த ஊரான கனகபுராவில் விமான நிலையம் அமைக்க, அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் 30 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு, தேவனஹள்ளியில் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, பெங்களூரு அருகே 2வது விமான நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ராம்நகரின் கனகபுரா, பெங்களூரு ரூரலின் நெலமங்களா, துமகூரின் சேலுார் ஆகிய 3 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த இடத்தை மத்திய குழுவினரும் ஆய்வு செய்ய உள்ளனர்.
துணை முதல்வர் சிவகுமார் தொகுதியான கனகபுராவில் விமான நிலையம் அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 30 பேர் கனகபுராவில் விமான நிலையம் அமைய எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
துமகூரு மாவட்டம், சிராவில் விமான நிலையம் அமைக்க வேண்டுமென, அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வும், கர்நாடக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியுமான ஜெயசந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.
இவரை தவிர சிக்கமகளூரு தம்மய்யா, ஒன்னாளி சாந்தனகவுடா, ஆலந்த் பி.ஆர்.பாட்டீல், மூடிகெரே நயனா, சிருகுப்பா நாகராஜ், அதானி லட்சுமண் சவதி, சிந்தகி ஹம்பனகவுடா பத்ரேலி, கடூர் ஆனந்த், தார்வாட் ரூரல் வினய் குல்கர்னி, ஹுக்கேரி கணேஷ், ராம்துர்க் அசோக் பட்டன் உட்பட 30 பேர் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
ஷிராவில் விமான நிலையம் கட்டுவது, வடமாவட்டங்களுக்கு அனுகூலமாக இருக்கும். சிரா வழியாக தான் சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. வசந்தநரசபுராவில் தொழிற்பேட்டை உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் மைதானமும் இங்கு கட்டப்பட்டு வருகிறது. எட்டினஹோலே, பத்ரா, ஹேமாவதி ஆகிய நீர்ப்பாசன வசதி உள்ளது.
துமகூரு - ராயதுர்கா ரயில் பாதை வழிதடம் உள்ளது. வடமாவட்டங்களில் நுழைவு வாயில் பகுதியாக துமகூரின் சிரா உள்ளதால், இங்கு விமான நிலையம் அமைந்தால் அதிக பயன் அளிக்கும். பெங்களூரு நகர பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.