30 டி.எம்.சி., பெண்ணையாற்று நீர் கடலில் கலந்தது...; நீர் மேலாண்மைக்கு நடவடிக்கை தேவை
30 டி.எம்.சி., பெண்ணையாற்று நீர் கடலில் கலந்தது...; நீர் மேலாண்மைக்கு நடவடிக்கை தேவை
ADDED : பிப் 21, 2025 11:43 PM
தென்பெண்ணையாற்றில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 30 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீர் மேலாண்மையை பாதுகாக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.30 டி.எம்.சி.,
தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மிக முக்கியமானது தென்பெண்ணையாறு. இது கர்நாடக மாநிலம், நந்தி துர்கா மலையில் உருவாகி, 430 கி.மீ., பயணிக்கிறது.
தமிழக எல்லையில் கெலாவரப்பள்ளி, கிருஷ்ணகிரி, சாத்தனுார் அணையை கடந்து, அதன் பிறகு திருக்கோவிலுார், எல்லீஸ், சொர்ணாவூர் என சிறு, சிறு தடுப்பணைகளை தாண்டி கடலுாரில் கடலில் கலக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் பெஞ்சல் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், தென்பெண்ணையாற்றில் குறிப்பாக சாத்தனுார் அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீர் திறக்கப் பட்டது.
இதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம் முழுதும் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் கிட்டத்தட்ட, 15 டி.எம்.சி., என கூறப்படுகிறது. அணையின் கீழ்ப்பகுதியில் தென்பெண்ணையாற்றில் கலக்கும் முஷ்குந்தா நதி, துறிஞ்சலாறு உள்ளிட்ட பல கிளை நதிகளில் இருந்து திருக்கோவிலுார் அணைக்கட்டை, வினாடிக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீர் கடந்து சென்றது.
30 டி.எம்.சி தண்ணீர் வீண்
அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் மட்டும், கடலில் வீணாக கலந்த, நீரின் அளவு 30 டி.எம்.சி., என நீர்நிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது குறித்து நீர்வளத் துறையிடம் சரியான புள்ளி விவரங்கள் இல்லை.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஆண்டிற்கு 12 முதல் 15 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படுகிறது. அப்படியானால் சென்னைக்கு 2 ஆண்டிற்கு தேவையான, தண்ணீர் வீணாக கடலில் கலந்திருக்கிறது. கடந்த, 2022ம் ஆண்டிலும், இதே போல வெள்ளம் ஏற்பட்டு அதிக அளவிலான தண்ணீர் வீணாக கடலில் கலந்தது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் வேதனை
இது ஒருபுறமிருக்க, ஆற்றில் உபரியாக வரும் தண்ணீரை எவ்வாறு பயனுள்ளதாக மாற்றி விவசாயத்திற்கு வழங்க முடியும் என்பது குறித்து ஆய்வுகளும் இதுவரை நடத்தப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து பிரியும் பம்பை வாய்க்காலை அகலப்படுத்தி மேம்படுத்துவதன் மூலம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாதானுார் 'ரெகுலேட்டர்' வழியாக தண்ணீரை திருப்பி, பொய்யப்பாக்கம் ஏரியை விரிவுபடுத்தி தண்ணீரை சேமிக்க முடியும். அங்கிருந்து வறட்சி காலங்களில் சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதேபோல தென்பெண்ணை ஆற்றையும், கெடிலம் நதியும் இணைப்பதன் மூலம் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும் தென்பெண்ணையாற்றில் சாத்திய கூறுகள் உள்ள இடங்களை ஆய்வு செய்து, தடுப்பணைகளை உருவாக்குவதால் வீணாக தண்ணீர் கடலில் கலப்பதை தடுப்பதுடன் விவசாயத்தை மேம்படுத்த முடியும்.
வெள்ள பாதிப்பையும் தடுக்கலாம். இதற்கெல்லாம் விரிவான ஆய்வு அவசர அவசியம் என்றார்.
நீர் மேலாண்மையை பாதுகாக்க தமிழக அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-நமது நிருபர்-

