3,000 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தீவன புல் நறுக்கும் கருவி
3,000 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தீவன புல் நறுக்கும் கருவி
ADDED : ஜூன் 22, 2025 01:34 AM
சென்னை:சிறு, குறு விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், மின்சாரத்தில் இயங்கும் தீவன புல் நறுக்கும் கருவிகள் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு தீவனம் மற்றும் அதற்கான உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டு மாநிலம் முழுதும் உள்ள 3,000 சிறு, குறு விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், மின்சாரத்தில் இயங்கும் தீவன புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளன.
இச்சலுகையை பெற, சிறு, குறு விவசாயிகளாக இருக்க வேண்டும். இரண்டு பெரிய கால்நடைகள் வைத்திருக்க வேண்டும்.
குறைந்தபட்சம், 0.25 ஏக்கர் தீவன சாகுபடி நிலத்தோடு, மின் வசதியை பெற்றிருக்க வேண்டும். தீவன புல் நறுக்கும் கருவி ஒன்றின் விலை, 32,000 ரூபாய். இதில், 16,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
தீவன புல் நறுக்கும் கருவிக்கான விலையில், 50 சதவீத பணம் செலுத்த தயாராக இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் உள்ள உதவி மருத்துவரை அணுகவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

