3,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் ஐந்து ஆண்டுகளுக்கு வாங்க அனுமதி கேட்பு
3,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் ஐந்து ஆண்டுகளுக்கு வாங்க அனுமதி கேட்பு
UPDATED : நவ 06, 2026 07:37 PM
ADDED : நவ 06, 2026 05:58 PM
சென்னை: மின் தேவையை பூர்த்தி செய்ய, 2027 பிப்.,1ம் தேதி முதல், 2032 ஜன.,1ம் தேதி வரை, தினமும், 3,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் அனுமதி கேட்டுள்ளது.
தமிழக மின்தேவை, தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட், கோடை காலத்தில், 20,000 மெகா வாட் தாண்டுகிறது. இதில், மின் வாரியத்தின் அனல், நீர், எரிவாயு மின்சாரத்தின் பங்கு, 4,000 மெகா வாட் வரை இருப்பதால், பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய மின் நிலையங்கள் மற்றும் தனியாரிடம் மின்சாரம் வாங்கப்படுகிறது.
அதன்படி, 10 மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, 2,830 மெகா வாட் மின்சாரத்தை, 2014 பிப்., 1ம் தேதி முதல், நீண்ட கால அடிப்படையில் கொள்முதல் செய்ய, மின் வாரியம் ஒப்பந்தம் செய்தது. இதில் எட்டு நிறுவனங்கள் உடனான ஒப்பந்தம், 2028 செப்டம்பரிலும், இரு நிறுவனங்களின் ஒப்பந்தம், 2029 மார்ச்சிலும் முடிவடைகிறது. இந்த ஆண்டு கோடை காலம் முடிந்தும், வெயில் அதிகம் இருப்பதால், இன்னும் தினசரி மின் தேவை, 20,000 மெகா வாட்டாக உள்ளது.
அதை பூர்த்தி செய்ய, போதிய மின்சாரம் கிடைக்காததால், கடந்த மாதம், 1,500 மெகா வாட் மின்சாரத்தை யூனிட், 41 ரூபாய்க்கு வாங்கும் பணியில் மின் வாரியம் ஈடுபட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இம்மாதம் முதல், 2027 மே வரை, 4,900 மெகா வாட், ‘டெண்டர்’ கோரப்பட்டதிலும் அதிக விலை கிடைத்தது.
எனவே, அந்த ‘டெண்டர்’ ரத்து செய்யப்பட்டது. வரும் ஆண்டுகளில், மின் தேவை வழக்கத்தை விட மேலும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது, 2027 பிப்., 1 முதல், 2032 ஜன.,1 வரை, தினசரி, 24 மணி நேரமும், 3,000 மெகா வாட் மின்சாரம் வாங்க, ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின்வாரியம் அனுமதி கேட்டுள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குறுகிய கால அடிப்படையில் மின்சாரம் வாங்க, டெண்டர் கோரப்படுவதில், யூனிட் மின்சாரத்திற்கு, 30 – 40 ரூபாய் என, அதிக விலை வருகிறது. எனவே, ஐந்து ஆண்டுகளுக்கு, 3,000 மெகா வாட் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆணையத்திடம் இருந்து, அனுமதி கிடைத்ததும், இந்த மின்சாரம் வாங்க, ‘டெண்டர்’ கோரப்படும்’ என்றார்.
