ADDED : ஆக 21, 2025 01:07 AM
சென்னை:தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல, அரசு விரைவு பஸ்களில் இதுவரை, 30,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் அக்., 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. ரயில்களில், 60 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. வழக்கம்போல், இந்த ஆண்டும் ரயில்களில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது.
அரசு விரைவு பஸ்களில் பயணிக்க, www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாகவும், முன்பதிவு மையங்களிலும், முன் பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு விரைவு பஸ்களில், 90 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. எனவே, பொது மக்கள் தீபாவளிக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு வழக்கமாக செல்லும் விரைவு பஸ்களில், அதிகளவில் முன்பதிவு செய்யப்படுகிறது.
இதுவரை, 30,000க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதில், 80 சதவீதம் பேர், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல டிக்கெட் எடுத்துள்ளனர். கடைசி நேரத்தில் அவசர பயணத்தை தவிர்க்க, முன்பதிவு செய்தால், கூடுதல் பஸ்களை இயக்க உதவியாக இருக்கும்.
இந்த ஆண்டு அதிகளவில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர் என, எதிர்பார்க்கிறோம். தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்த கூட்டம், அடுத்த மாதம் நடத்தப்படும். 5,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.