ADDED : மார் 23, 2025 01:57 AM

ராமநாதபுரம்: தமிழகத்தில் இருந்து பைபர் படகில் கடத்தப்பட்ட 308 கிலோ கஞ்சா பொட்டலங்களை இலங்கை யாழ்பாணம் பருத்தித்துறை தும்பளை மூர்க்கன் கடற்கரையில் இலங்கை ராணுவ புலனாய்வுத்துறையினர்படகுடன் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து இலங்கை யாழ்பாணம் பகுதிக்கு பைபர் படகில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக இலங்கை ராணுவ புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் யாழ்பாணம் பருத்தித்துறை தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் புலனாய்வுத்துறையினர் சோதனை நடத்தினர்.
கடற்கரை பகுதியில் பைபர் படகு அருகில் நின்ற இருவர் ராணுவத்தினரை பார்த்தவுடன் தப்பி ஓடினர். பைபர் படகில் சோதனை செய்ததில் 154 பொட்டலங்களில் 308 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்து பருத்தித்துறை போலீசாருக்கு இலங்கை ராணுவத்தினர் தெரிவித்தனர். தப்பிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அதன் மதிப்பு ரூ.80 லட்சம் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.