'32 மாத தி.மு.க., ஆட்சியில் ஒரு பஸ் கூட வாங்கவில்லை!'
'32 மாத தி.மு.க., ஆட்சியில் ஒரு பஸ் கூட வாங்கவில்லை!'
ADDED : ஜன 05, 2024 10:47 PM
சென்னை:'கடந்த 32 மாத தி.மு.க., ஆட்சியில், ஒரு புதிய பஸ் கூட வாங்கப்படவில்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், கடந்த ஆகஸ்ட் 31ல் முடிந்த நிலையில், அடுத்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்க வேண்டும்.
தொழிற்சங்கங்கள் நினைவூட்டியும், அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால், 95 சதவீத தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளன.
அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுகளில், ஊதிய உயர்வு, ஓய்வு கால பயன்கள், அகவிலைப்படி நிலுவை போன்ற கோரிக்கைகளை, தி.மு.க., அரசு ஏற்கவில்லை. இதனால், வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை, 23 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த 32 மாதங்களில் ஒரு புதிய பஸ் கூட வாங்கவில்லை.
ஒரு நபர் கூட புதிதாக வேலைக்கு சேர்க்கப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பஸ்களின் ஆயுட்காலத்தை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்தது தான் தி.மு.க., அரசின் சாதனை.
புதிய பஸ்கள் வாங்க ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதி என்னவானது என்று தெரியவில்லை. ஆயுட்காலம் முடிந்த பஸ்களின் இன்ஜின்களை மாற்றாமல், வெளித் தோற்றத்தை மட்டும் மாற்றியமைக்க, தி.மு.க., அரசு ஒப்பந்தம் போட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகை வருவதால், வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.