ADDED : அக் 25, 2025 10:03 PM
சென்னை: 'இரிடியம்' மோசடியில் ஈடுபட்ட ஐந்து முக்கிய குற்றவாளிகள் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இரிடியம் என்ற உலோகம் மிகவும் அரிதானது. இரிடியத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 1 கோடி ரூபாய் தரப்படும் என, தமிழகம் முழுதும் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது.
இதற்காக, ரிசர்வ் வங்கியில் பதிவு செய்தது போன்று போலி நிறுவனத்தை காட்டி, இரிடியம் விற்பனையில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மூன்று மாதத்தில் 1 கோடி ரூபாய் லாபம் கிடைக்கு என கூறி இம்மோசடி நடந்துள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்து வருகின்றனர். முதல் கட்டமாக, செப்., 12ம் தேதி 30 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
அதன்படி, கடந்த 23, 24ம் தேதிகளில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், 15 மாவட்டங்களில் தேடுதல் வேட்டையை துவக்கினர்.
கம்பம் சந்திரன், பெருமாநல்லுார் ராணி, முசிறி யுவராஜ், வருசநாடு பழனியம்மாள், நாகை ராஜசிவம் ஆகிய ஐந்து முக்கிய குற்றவாளிகளுடன், அவர்களது கூட்டாளிகள் 27 பேர் என, 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 62 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
'ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், இரிடியம் விற்பனை வாயிலாக கோடிக்கணக்கில் வெளிநாட்டிலிருந்து பணம் கிடைக்கும் என்பது போன்ற வதந்திகளை நம்பி, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என சி.பி.சி.ஐ.டி., போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

