கிராமப்புறங்களில் 33,869 பேருக்கு சிறுநீரக பாதிப்பு அறிகுறி
கிராமப்புறங்களில் 33,869 பேருக்கு சிறுநீரக பாதிப்பு அறிகுறி
ADDED : மே 31, 2025 04:29 AM

சென்னை:ஊரகப் பகுதிகளில், சிறுநீரகம் காக்கும் திட்டத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், 33,869 பேருக்கு பாதிப்புக்கான அறிகுறி கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும், 'சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம்' 2023 ஜூலை 10ம் தேதி ஊரகப் பகுதிகளில் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின்படி, சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அந்தந்த கிராமத்திலேயே, சிறுநீரக பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கிராம சுகாதார செவிலியர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் வாயிலாக, துணை சுகாதார நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுவரை 1.07 கோடி பேருக்கு பரிசோதனை செய்ததில், 33,869 பேருக்கு ஆரம்பகட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுஉள்ளனர்.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
கட்டட மற்றும் விவசாய வேலைகளில் பணியாற்றுவோருக்கு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பள்ளது. தமிழகத்தில் உள்ள 2 கோடி சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்புஉள்ளது.
இதுவரை, 1.07 கோடி பேரிடம் நடத்திய பரிசோதனையில், 33,869 பேருக்கு சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இவர்கள் மேல் சிகிச்சைக்காக, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்ப நிலையிலேயே, சிறுநீரக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுவதால், சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

