"கேபிள் டிவி' ஆபரேட்டர்கள் ஆன்-லைனில் தனித் தனியே விண்ணப்பிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன் தகவல்
"கேபிள் டிவி' ஆபரேட்டர்கள் ஆன்-லைனில் தனித் தனியே விண்ணப்பிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன் தகவல்
ADDED : ஆக 01, 2011 11:17 PM
சென்னை: ''அரசு, 'கேபிள் டிவி' திட்டத்தில் தமிழக, 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள் ஒவ்வொருவரும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்,'' என்று அரசு, 'கேபிள் டிவி' நிறுவனத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரசு, 'கேபிள் டிவி' நிறுவனத்தில் தமிழக, 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள் இணைவதற்கு, கடந்த சில தினங்களுக்கு முன் அரசு அறிவித்தது.
இதில், 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள் (சென்னை தவிர்த்து) 1,000 ரூபாய்க்கான 'டிடி'யை அரசு, 'கேபிள் டிவி' கார்ப்பரேஷன் முகவரிக்கு, சென்னையில் மாற்றத்தக்க வகையில் செலுத்தி, அரசு, 'கேபிள் டிவி' திட்டத்தில் இணைய வேண்டும். இதில், தமிழகத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே உள்ள எம்.எஸ்.ஓ.,க்கள், தங்களின் கீழ் உள்ள, 'கேபிள் டிவி' ஆபரேட்டர்களை தங்களிடம் பணம் செலுத்துமாறு தெரிவித்துள்ளனர். தங்களிடம் பணம் செலுத்தினால் விரைவில், அரசு, 'கேபிள் டிவி' நிறுவனத்தில் உறுப்பினராக்கி விடுகிறோம் என்று சிலர் ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இது குறித்து அரசு, 'கேபிள் டிவி' நிறுவனத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள் தனித் தனியே ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் அருகில் உள்ள எம்.எஸ்.ஓ.,க்கள் கூறுவதைக் கேட்டு, அவர்களிடம் பணம் செலுத்த வேண்டாம். மற்றவர்களுடன் இணைந்து விண்ணப்பம் செய்வதைத் தவிர்த்து, அரசு அறிவித்தது போல் தனியாக, 'டிடி'யும், விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து அதில் கையொப்பமிட்டு அரசு, 'கேபிள் டிவி' நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். கடைசி தேதியான ஆக., 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தனியே விண்ணப்பித்தால் தான், தமிழகத்தில் உள்ள, 'கேபிள் டிவி' ஆபரேட்டர்களை கணக்கிட முடியும்.
இது குறித்து அரசு, 'கேபிள் டிவி' ஆபரேட்டர் சங்கத் தலைவர் யுவராஜ் கூறும்போது, ''கோவை, புதுக்கோட்டை, தஞ்சையைச் சேர்ந்த, 'கேபிள் டிவி' கட்டுப்பாட்டு அறையின் சில முதலாளிகள், 'கேபிள் டிவி' ஆபரேட்டர்களை நேரடியாக அரசு, 'கேபிள் டிவி'யில் இணைய விடாமல் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நினைக்கின்றனர். இதனால், அவர்களின் ஆதிக்கம் தொடருவதற்கான நிலை உள்ளது. ''இது தவிர, அவர்களே அனைவரிடமும், அரசு, 'கேபிள் டிவி'யில் இணைவதற்கான தொகையை வசூலிக்கின்றனர். அரசு, 'கேபிள் டிவி' திட்டத்தில் இணைவதற்காக பணம் வாங்கி, அதை செலுத்தாமல், 'கேபிள் டிவி' ஆபரேட்டர்களை மிரட்டும் அபாயமும் உள்ளது. 'கேபிள் டிவி' ஆபரேட்டர்களே அரசு, 'கேபிள் டிவி'யின் ஆன்-லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார்.