ADDED : நவ 06, 2024 10:46 PM
சென்னை:தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழைக்கு, கடந்த அக்., 1 முதல் நேற்று முன்தினம் வரை, 34 பேர் இறந்துள்ளனர்.
தமிழகம் முழுதும், கடந்த மாதம் மழைக்கு, ஒன்பது பெண்கள், இரண்டு குழந்தைகள், 15 ஆண்கள் என, மொத்தம் 26 பேர் இறந்துள்ளனர். இவர்களில், 11 பேர் மின்னல் தாக்கி, ஐந்து பேர் மின்சாரம் தாக்கி, நான்கு பேர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர். மேலும், 19 பேர் காயமடைந்துள்ளனர்.
கால்நடைகள் 303 இறந்துள்ளன. மழையில் 864 குடிசைகள் பகுதி, 96 குடிசைகள் முழுமையாக சேதமைடந்துள்ளன. கச்சா வீடுகளில், 564 வீடுகள் பகுதி, ஒன்பது வீடுகள் முழுதும் சேதமடைந்துள்ளன.
மழை நீரில் 89,000 ஏக்கர் வேளாண் பயிர்கள் மூழ்கின. இதில், 5,856.37 ஏக்கர் பயிர்கள் முழுமையாக சேதமடைந்தன. தோட்டக்கலைப் பயிர்களில், 919 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதில் 141 ஏக்கர் பயிர்கள், முழுமையாக சேதமடைந்தன.
இம்மாதம் மழைக்கு மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் இறந்துள்ளனர். இவர்களில் ஆறு பேர் மின்னல் தாக்கி, ஒருவர் சுவர் இடிந்து, ஒருவர் மரம் விழுந்து இறந்துள்ளனர்; 79 கால்நடைகள் இறந்துள்ளன.
குடிசைகள் 96 பகுதியாக, 11 முழுமையாக, கச்சா வீடுகளில் 74 பகுதியாக, ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளன.