'உங்க வாயில நல்ல வார்த்தையே வராதா...' நிருபர்களிடம் கொந்தளித்த சீனிவாசன்
'உங்க வாயில நல்ல வார்த்தையே வராதா...' நிருபர்களிடம் கொந்தளித்த சீனிவாசன்
ADDED : நவ 01, 2024 08:51 PM
மதுரை:தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, 2014ல் அ.தி.மு.க., சார்பில், 5.50 கோடி ரூபாய் மதிப்பில், 13.50 கிலோ எடை தங்க கவசத்தை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிட சிலைக்கு கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா வழங்கினார்.
அந்த கவசம், மதுரை அண்ணாநகர் தனியார் வங்கி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கட்சியின் பொருளாளர், தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் கையெழுத்திட்டு பெறுவர். தேவர் ஜெயந்தி முடிந்ததும், மீண்டும் வங்கியிடம் ஒப்படைப்பர்.
இதன்படி, அக்., 25ல் பெறப்பட்ட தங்ககவசம் நேற்று மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மருத்துவரணி இணைச் செயலர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் சீனிவாசனிடம் விஜய் மாநாடு குறித்து நிருபர்கள் கேட்டனர். அப்போது, ''தற்போது தான், விஜய் அரசியலுக்கு தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். அதற்காக ஒரு மாநாட்டையும் நடத்தி முடித்துள்ளார். அதனால், இந்த விஷயத்தில் மேற்கொண்டும் என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். எது கேட்டாலும், என்னுடைய பதில் 'நோ கமென்ட்' தான்,'' என்றார்.
இருந்தபோதும் விடாத நிருபர்கள், 'அ.தி.மு.க.,வில் மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடக்க உள்ளது. தேர்தல் நேரத்தில் சரியாக செயல்படாத மாவட்டச் செயலர்கள் மீது ஜெயலலிதா போல் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் உள்ளது. அதை பழனிசாமி செய்வாரா?' என கேட்டனர்.
அதற்கு கோபப்பட்ட சீனிவாசன், ''உங்கள் வாயில் எப்பவும் நல்ல வார்த்தையே வராதா? கட்சியில எல்லோரும் நல்லா தான் பணிபுரிகிறாங்க. ஆனால், உங்க கண்ணுக்கு மட்டும் ஏதோ குறை தெரியுது. இருந்தாலும், சரியா செயல்படாதவங்க மேல, ஜெயலலிதாவை விட அதிகமாக யோசித்து பழனிசாமி நடவடிக்கை எடுப்பார். அவரின் ஒவ்வொரு செயல்பாடும் அப்படித்தான் இருக்கு,'' என்றார்.

