"மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு": முதல்வர் ஸ்டாலின் பேச்சு
"மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு": முதல்வர் ஸ்டாலின் பேச்சு
UPDATED : மார் 11, 2024 11:24 AM
ADDED : மார் 11, 2024 11:23 AM

தர்மபுரி: 'மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண்கிறோம்' என தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்தில் ரூ.350.50 கோடியில் முடிவுற்ற 993 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தர்மபுரியில் ரூ.114 கோடி மதிப்பிலான 75 திட்டப் பணிகளுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களுக்கான முத்தான விழா. தர்மபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். மகளிர் உரிமைத் திட்டத்தால் 1.15 கோடி மகளிர் பயன் பெறுகின்றனர்.பயனடைந்த பெண்கள் 'இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர்' என்கின்றனர். பொருளாதார அதிகாரம் உள்ளவர்களாக பெண்களை மாற்றியுள்ளோம்.
சொல்லாததையும் செய்யும் ஆட்சி
தமிழகத்தில் சொல்லாததையும் செய்யும் ஆட்சி நடக்கிறது. அனைத்து மாவட்டங்களையும் சமமாக மதித்து தமிழக அரசு செயல்படுகிறது. மாநிலங்களை மத்திய அரசு சமமாக நடத்துவதில்லை. தேர்தல் முடிந்த பின், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நின்றுவிடும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில அரசு முக்கால் பங்கு நிதி வழங்குகிறது. ஜல் ஜீவன் திட்டத்திற்கு 50 சதவீத நிதி தமிழக அரசு வழங்குகிறது. மாநில அரசின் நிதியில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி தன்னுடைய ஸ்டிக்கரை பிரதமர் மோடி ஒட்டுகிறார். மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண்கிறோம்.
அ.தி.மு.க.,வை சாடிய ஸ்டாலின்
குடிநீர் திட்டத்தை முடக்கியது அதிமுக ஆட்சி தான். 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் 5 சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும். 10 ஆண்டுகளாக தமிழத்தை சுரண்டியவர்களால் திமுக போல் திட்டங்களை செயல்படுத்த முடிந்ததா?.
திமுக அரசு போல மக்கள் நலத்திட்டங்களை அ.தி.முக,வால் பட்டியலிட முடியுமா?. வாச்சாத்தி கொடுமையை யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள். எந்த ஆட்சியில் நடந்தது என்பதையும் மறந்து இருக்க மாட்டீர்கள். தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களின் நலனுக்காக நடக்கும் ஆட்சி திமுக. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

