ADDED : மார் 25, 2024 10:16 AM

கோவை: 'ஆன்மிகமும், அரசியலும் ஒன்று தான்' என தொண்டாமுத்தூரில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழகத்தில், வரும், ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதில், கோவை லோக்சபா தொகுதியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இன்னும், இரு நாட்களில், வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரை அண்ணாமலை சந்தித்தார். பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், அண்ணாமலைக்கு சால்வை அணிவித்து, மலர் கிரீடம் வைத்து ஆசி வழங்கினார்.
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: கோவையில், 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோவையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவே கூடாது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு சிறுவாணியின் குறுக்கே 90 சதவீத அணை கட்டிவிட்டனர். மாநில அரசு தடுக்கவில்லை. ஆன்மிகமும், அரசியலும் வெவ்வேறு அல்ல. இரண்டும், அறத்தை கொண்டு செயல்படுகிறது. நான் பாதை மாறி செல்லாமல் இருக்க, மடாதிபதிகளையும், சன்யாசிகளையும், குருமார்களையும் அடிக்கடி சந்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

