"அரசியலை தாண்டி தமிழகத்திற்கு அதிக முதலீடுகள் தேவை": அண்ணாமலை பேட்டி
"அரசியலை தாண்டி தமிழகத்திற்கு அதிக முதலீடுகள் தேவை": அண்ணாமலை பேட்டி
ADDED : ஜன 09, 2024 02:06 PM

சென்னை: ''முதலீடுகளை ஈர்ப்பதில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. அரசியலை தாண்டி தமிழகத்திற்கு அதிக முதலீடுகள் தேவை'' என நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறினார்.
இது குறித்து அண்ணாமலை கூறியதாவது: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.6.60 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன. ஆனால் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி வரும் என எதிர்பார்த்தோம். சென்னை, செங்கல்பட்ட காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் 34 சதவீதம் உற்பத்தி திறன் உள்ளது. அரசியலை தாண்டி தமிழகத்திற்கு அதிக முதலீடுகள் தேவை. முதலீட்டில் தமிழக அரசு இன்னும் அதிக இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும். முதலீடுகளை ஈர்ப்பதில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது.
அம்பானியை பாராட்டும் திமுக.,வினர்
தமிழக அரசியல் தலைவர்கள் முன்பு அதானி, அம்பானியை விமர்ச்சித்து, பா.ஜ.,வுடன் இணைத்து பேசினர். தற்போது அவர்கள் முதலீடு செய்தவுடன் பாராட்டி பேசுகின்றனர். குஜராத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே, ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன. வளர்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களில் ஊக்கம் தேவை. உ.பி.,யில் முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.33.51 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
5ம் இடத்தில் தமிழகம்
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் 5ம் இடத்தில் உள்ளது. தமிழகம் 9 பில்லியன் டாலர் அளவிற்கு மட்டுமே அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் அரசியல் பாதை மாற வேண்டும் என்று என் மண் என் மக்கள் யாத்திரை தெளிவுப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.