"போதைப்பொருள் கிடங்காக மாறும் தமிழகம்"- இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
"போதைப்பொருள் கிடங்காக மாறும் தமிழகம்"- இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
ADDED : மார் 03, 2024 02:37 PM

சென்னை: தி.மு.க., ஆட்சியில் தமிழகம் போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி. எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.
போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு வீடியோவை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி. எஸ்., வெளியிட்டுள்ளார். வீடியோவில் இ.பி.எஸ்., பேசியதாவது: தமிழக அரசை கண்டித்து நாளை அனைத்து மாவட்டங்களில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப்போவதில்லை. தமிழகத்தில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தி.மு.க., ஆட்சியில் தமிழகம் போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது.போதைப்பொருள் புழக்கத்தை அரசு கட்டுப்படுத்தவில்லை. மாணவ செல்வங்களே, இளைய சமுதாயமே உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும்.
வாழ்வியலை பாதிக்கும்
பெற்றோராக நம் முதல் கடமை, நம் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவது தான். போதைப்பொருள் நம் அனைவரின் வாழ்வியலை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் விஷயம். போதைப்பொருளால் அதிகமாக பாதிக்கப்படுவது பள்ளி, கல்லூரி மாணவர்களும், ஐ.டி. துறையினரும் தான். நாம் வாழ்வது தமிழகமா? அல்லது போதைப்பொருள் மொத்த விற்பனை கிடங்கா என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

