"வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசு திமுக கிடையாது": சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
"வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசு திமுக கிடையாது": சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : பிப் 24, 2024 12:08 PM

சென்னை: 'வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசு தி.மு.க., கிடையாது' என கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்த பின், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில், ரூ.2,465 கோடி மதிப்பீட்டில், அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நாள்தோறும் 15 கோடி லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் போதாது
பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நான் செயல்படுத்திய திட்டங்களை பட்டியல் போட்டால், சொல்வதற்கு ஒரு நாள் போதாது. நிதி நெருக்கடியிலும் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நகர்ப்புற மக்களின் அடிப்படை தேவையான சாலை, கல்வி, மருத்துவ தேவைகளை அரசு வழங்கி வருகிறது. நாட்டிலேயே அதிக நகரமயமாக்கலை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
9 லட்சம் மக்கள் பயன்பெறுவர்
கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மூலம், தென் சென்னையில் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர். 95 முடிவுற்ற திட்ட பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளன. நான் முதலில் அமைச்சராக பதவியேற்ற துறையும், பார்த்து பார்த்து வளர்ந்த துறையும் நகராட்சி நிர்வாக துறை தான். சீர்மிகு சென்னையை உருவாக்கியதில் திமுக.,வுக்கு பெரிய பங்கு உள்ளது.
வெற்று அறிவிப்புகள்
சென்னை மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசு தி.மு.க., கிடையாது. எனது இதயத்திற்கு நெருக்கமான திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

