தேசிய தடய அறிவியல் பல்கலைக்கு ஊனமாஞ்சேரியில் 35 ஏக்கர்
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கு ஊனமாஞ்சேரியில் 35 ஏக்கர்
ADDED : மே 23, 2025 12:34 AM
சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் காவலர் உயர் பயிற்சியகம் அருகே, 35 ஏக்கரில் தேசிய தடய அறிவியல் பல்கலை அமைய உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், டில்லி, குஜராத், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் தேசிய தடய அறிவியல் பல்கலை செயல்பட்டு வருகிறது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூர் ஆகிய இடங்களில், இந்த ஆண்டு தேசிய தடய அறிவியல் பல்கலை துவக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் செயல்படும் காவலர் உயர் பயிற்சியகம் அருகே, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கு 35 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து, தேசிய தடய அறிவியல் பல்கலை நிர்வாகிகள் கூறுகையில், 'தற்காலிகமாக சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் டாக்டர் எம்.ஜி.ஆர்., ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி கல்லுாரியில், தேசிய தடய அறிவியல் பல்கலை துவக்கப்பட்டுள்ளது.
'இந்த ஆண்டு மூன்று முதுகலை படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கிய நிலத்தில் விரைவில் கட்டுமான பணி துவக்கப்படும்' என்றனர்.