ஆக்கிரமித்த அரசு நிலம் 35 ஆயிரம் ஏக்கர் மீட்பு உயர் நீதிமன்றத்தில் தகவல்
ஆக்கிரமித்த அரசு நிலம் 35 ஆயிரம் ஏக்கர் மீட்பு உயர் நீதிமன்றத்தில் தகவல்
ADDED : மார் 15, 2024 12:44 AM
மதுரை:ஆக்கிரமிப்பிலிருந்து அரசுக்கு சொந்தமான, 35,800 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே தாயனுார் பனையாடி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
தாயனுாரில் நத்தம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்றி, பாதை அமைத்து தரக் கோரி கலெக்டர், ஸ்ரீரங்கம் தாசில்தாருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருந்ததாவது:
அரசு நிலத்தை ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க, தாலுகா, மாவட்டம், மாநில அளவில் குழுக்களை அமைத்து தமிழக வருவாய்த் துறை, 2022ல் அரசாணை பிறப்பித்தது. அக்குழு, மாதம் ஒருமுறை கூட வேண்டும்.
அரசாணையை நிறைவேற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, தமிழக வருவாய் நிர்வாக கமிஷனர், மார்ச் 14ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டிருந்தனர்.
மனுவை மீண்டும் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு தெரிவித்ததாவது:
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைக்கப்பட்டுள்ள குழுக்கள், அவ்வப்போது கூடி ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கின்றன.
அரசு புறம்போக்கு நிலம், நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. 35,800 ஏக்கர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்கிறது.
இவ்வாறு தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்தது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், 'மனுதாரருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், சிவில் நீதிமன்றத்தை நாடலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டனர்.

