லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய 35,279 பேருக்கு அபராதம்
லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய 35,279 பேருக்கு அபராதம்
ADDED : ஏப் 25, 2025 12:21 AM
சென்னை:ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டிய 35,279 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி, 3.76 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடுகின்றன. இதில், இருசக்கர வாகனங்கள் மட்டும், 3 கோடியே 15 லட்சத்து 81,062 உள்ளன. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு பின், சொந்த வாகனங்களில் பயணிப்பது அதிகரித்துள்ளது.
வாகன சோதனை நடத்தி, விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது போக்குவரத்து போலீஸ் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்களும் நெடுஞ்சாலைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை உட்பட பல்வேறு நகரங்களில், உரிய உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.
அதன்படி, 2024 - 25ம் நிதியாண்டில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கிய 35,279 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில், 13 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், வாகனங்கள் ஓட்டிச் செல்வதை கண்டறிந்து, அவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கி வருகிறோம். சிறுவர்களின் நலன் கருதி, அவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.