இம்முறை சிக்கியது 3.62 லட்சம் ரூபாய் மட்டும்; லஞ்சத்தில் திளைக்கும் சோதனைச்சாவடிகள்!
இம்முறை சிக்கியது 3.62 லட்சம் ரூபாய் மட்டும்; லஞ்சத்தில் திளைக்கும் சோதனைச்சாவடிகள்!
ADDED : டிச 06, 2024 11:45 AM

கோவை: கோவை க.க.சாவடி சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.3.62 லட்சம் ரொக்கம் சிக்கியது.
கோவை - பாலக்காடு சாலையில் க.க.சாவடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு சொந்தமான சோதனைச்சாவடி உள்ளது. இது கேரளாவிற்கு செல்லும் பிரதான சாலை என்பதால், வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும். இதனைப் பயன்படுத்தி, இங்கு பணியில் இருக்கும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், வாகன ஓட்டிகளிடம் தொடர்ந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால், லஞ்ச ஒழிப்புத்துறையினரும் அடிக்கடி சோதனை நடத்துவது வழக்கம். அப்படி ரெய்டு நடத்தும் போதெல்லாம், கட்டு கட்டாக பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது.
கடந்த அக்.,23ம் தேதி க.க.சாவடி சோதனை சாவடியில் நடத்திய சோதனையின் போது, கணக்கில் வராத ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் புர்ஹானுதீன், உதவியாளர் ஈஸ்வரன் மற்றும் அலுவலக உதவியாளர் தங்கராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாகனங்களை நிறுத்தி அவர்களிடம் மாமூல் பணத்தை வசூலிக்க, தினமும் ரூ.1,000 சம்பளத்திற்கு ஒரு நபரை வேலைக்கு அமர்த்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. இது லஞ்ச ஒழிப்புத்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சோதனை நடந்து 2 மாதத்தில், க.க.சாவடி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர். இதில், கணக்கில் வராத 3 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் சிக்கியது. மோட்டார் வாகன ஆய்வாளர் குமாரிடம் இருந்து 3.21 லட்சம் ரூபாயும், உதவியாளர் ரோஸ்லினிடம் இருந்து 38 ஆயிரம் ரூபாயும், அதுபோக தனியாக பெட்டியில் இருந்த 3 ஆயிரத்து 500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.