ADDED : மார் 15, 2024 07:18 PM
சென்னை:கிராமங்களில் வசிக்கும் பெண்கள் சமையலுக்கு எரியூட்ட விறகு பயன்படுத்துவதால், சுவாச கோளாறு நோயால் பாதிக்கப்பட்டனர். இதை தடுக்க மத்திய அரசு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜானா' திட்டத்தை, 2016ல் துவக்கியது.
இத்திட்டத்தின் கீழ், ஏழ்மையில் உள்ள குடும்ப தலைவிக்கு, காஸ் அடுப்பு, அதற்கான டிபாசிட் தொகை, ரப்பர் குழாய், ரெகுலேட்டர் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்காக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவை மத்திய அரசு வழங்குகிறது.
இலவச காஸ் இணைப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில், 32 லட்சம் பயனாளிகளுக்கு காஸ் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.
அத்திட்டத்தை, இந்த நிதியாண்டில் இருந்து மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்தது. நாடு முழுதும், 1,650 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக, 75 லட்சம் காஸ் இணைப்புகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதற்கான பணி, 2023 அக்டோபரில் இருந்து துவங்கியது. தமிழகத்தில், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கிராமங்களில் சென்று பயனாளிகளை தேர்வு செய்து, காஸ் இணைப்பு வழங்கினர்.
இதுவரை, தமிழகத்தில் இலவச காஸ் இணைப்பு திட்டத்தில் ஒட்டு மொத்தமாக, 37 லட்சம் பயனாளிகளுக்கு காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

