சி.என்.ஜி., தொழில்நுட்பத்துக்கு 38 அரசு பஸ்கள் மாற்றம்
சி.என்.ஜி., தொழில்நுட்பத்துக்கு 38 அரசு பஸ்கள் மாற்றம்
ADDED : ஜூலை 17, 2025 09:32 PM
சென்னை:'அரசு போக்குவரத்து கழகங்களில், 38 பஸ்கள் சி.என்.ஜி., தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், 92.04 லட்சம் ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது' என, போக்கு வரத்து துறை தெரிவித்துஉள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் டீசல் செலவை குறைக்கும் வகையில், டீசலுக்கு மாற்றாக சி.என்.ஜி ., எனப்படும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வாயிலாக பஸ்களை இயக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
முதல் கட்டமாக, கடந்த ஜனவரி மாதத்தில், மூன்று பஸ்கள் தேர்வு செய்யப்பட்டு, சி.என்.ஜி., தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன. அவற்றின் பராமரிப்பு மற்றும் டீசல் செலவு குறைந்தது. இதையடுத்து, சி.என்.ஜி., வகை பஸ்களின் எண்ணிக்கை, படிப்படியாக அதிகரிக்கப்பட உள்ளது.
இது குறித்து, தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு போக்குவரத்து கழகங்களில், கடந்த மாதம் வரை, 38 பஸ்கள் சி.என்.ஜி.,யில் இயங்கும் பஸ்களாக மாற்றப்பட்டு இயங்கி வருகின்றன. நடப்பாண்டு ஜூன் மாதம் வரை, டீசல் பஸ்களுடன் ஒப்பிடும்போது, சி.என்.ஜி., பஸ்களால் கி.மீ.,க்கு 3.94 ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆறு மாதங்களில் 92.04 லட்சம் ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் வாயிலாக, சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்க முடிகிறது. வரும் ஆண்டுகளில், சி.என்.ஜி.,யில் இயங்கும் பஸ்களின் எண்ணிக்கையை, 200 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.