ADDED : ஜன 28, 2025 12:52 AM

சிவகங்கை, : வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆர்.டி.ஓ., பி.ஏ., மற்றும் கிரேடு 1 ஆய்வாளர் 38 பேருக்கு ஆர்.டி.ஓ., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் காலியாக உள்ள ஆர்.டி.ஓ., பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு பட்டியலில் உள்ள ஆர்.டி.ஓ., பி.ஏ., மற்றும் கிரேடு 1 ஆய்வாளர்களுக்கு ஆர்.டி.ஓ., பதவி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மாநில அளவில் ஆர்.டி.ஓ., பி.ஏ., மற்றும் கிரேடு 1 ஆய்வாளராக இருந்த 38 பேருக்கு ஆர்.டி.ஓ., பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலியாகவே இருந்த சென்னை கிழக்கு, மேற்கு, தெற்கு, அம்பத்துார், சேலம் தெற்கு மற்றும் மேற்கு, பெரம்பலுார், ஸ்ரீரங்கம், தேனி, திருநெல்வேலி, பழநி, திருச்சி (மேற்கு), சிவகாசி, மேட்டூர், மயிலாடுதுறை, கோயம்புத்துார் (வடக்கு), ஆரணி, திருப்பூர் (தெற்கு), வேலுார், விருதுநகர், திருச்செங்கோடு ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆர்.டி.ஓ., பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 38 இடங்களில் காலியான ஆர்.டி.ஓ., பி.ஏ., மற்றும் ஆய்வாளர் பணியிடங்களை விரைந்து நிரப்பினால் மட்டுமே வாகனங்கள் பதிவில் காலதாமதம் ஏற்படாது. எனவே அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் காலியாகும் ஆய்வாளர், பி.ஏ., பணியிடங்களையும் நிரப்ப போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.