உச்சவரம்பு சட்டத்தில் சிக்கிய 380 ஏக்கர் நிலம் வரன்முறை
உச்சவரம்பு சட்டத்தில் சிக்கிய 380 ஏக்கர் நிலம் வரன்முறை
ADDED : அக் 30, 2025 10:52 PM
சென்னை:  நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தில் சிக்கிய, 380 ஏக்கர் நிலம் வரன்முறை செய்யப்பட்டு உள்ளதாக, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நில உச்சவரம்பு சட்டப்படி, நகர்ப்புற பகுதிகளில் தனி நபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் எவ்வளவு நிலம் வைத்துக்கொள்ளலாம் என, வரையறுக்கப்பட்டு உள்ளது.
நகர்ப்புற பகுதிகளில் தனி நபர்கள் பெயரில், 5,000 சதுர அடி முதல், 2 லட்சம் சதுர அடி வரை நிலம் அனுமதிக்கப்படும். இதற்கு மேற்பட்ட நிலங்கள் மிகை நிலமாக வரையறுக்கப்பட்டு, அரசின் கணக்கில் சேர்க்கப்படும். பெரும்பாலான மிகை நிலங்கள் முறையாக பாதுகாக்கப்படவில்லை.
இதனால், இந்நிலங்களை வெளியாட்களுக்கு விற்பனை செய்து விட்டனர். இதை வாங்கிய மக்கள், அதில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிலத்தை வாங்கியவர்கள், தங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்ய, அரசு தடையின்மை சான்று அ ளித்து, வரன்முறை செய்ய வேண்டும்.
ஆனால், வருவாய் துறை அதிகாரிகள் இது தொடர்பான கோப்புகளை கிடப்பில் போட்டதால், வரன் முறை பணிகள் முடங்கின.
இந்நிலையில், உச்சவரம்பு நிலங்கள் வரன்முறை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கடந்த, 2008 முதல் நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் மீது, வரன்முறை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இதன்படி, 6,289 பேருக்கு, 1.65 கோடி சதுர அடி அதாவது, 380 ஏக்கர் உச்சவரம்பு நிலங்கள் வரன்முறை செய்யப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக அரசுக்கு, 53.27 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உ ள்ளது.

