முதல்வருக்கு கருப்பு அஞ்சல் அட்டை அனுப்ப ஓய்வூதியர்கள் முடிவு
முதல்வருக்கு கருப்பு அஞ்சல் அட்டை அனுப்ப ஓய்வூதியர்கள் முடிவு
ADDED : அக் 30, 2025 10:51 PM
சென்னை:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல் வரும், 15ம் தேதி வரை, முதல்வரின் வீட்டுக்கு ஒரு லட்சம் கருப்பு அஞ்சல் அட்டைகள் அனுப்ப, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் நிர்வாகி ஸ்வர்ணம் கூறியதாவது:
'அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஓய்வூதியர்களுக்கு, சிறப்பு ஓய்வூதியமாக, 6,750 ரூபாய் மற்றும் அகவிலைப்படி வழங்கப்படும்' என, கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், தேர்தல் வாக்குறுதியை மறந்து, நான்கரை ஆண்டுகளை, தி.மு.க., வினர் கடத்தி விட்டனர்.
இதை முதல்வருக்கு நினைவூட்ட, கடந்த நான்கு ஆண்டுகளில், பட்டை அடிக்கும் போராட்டம் முதல், மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம் வரை, பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம்.
எனினும் முதல்வர் ஸ்டாலின், எங்கள் பிரச்னையில் நிரந்தர முடிவு எடுப்பதாக தெரியவில்லை. எனவே, சட்ட சபை தேர்தலுக்கு, இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், நவம்பர் முதல் பிப்ரவரி வரை மூன்று கட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்.
முதற்கட்டமாக, நாளை முதல் வரும், 15ம் தேதி வரை, முதல்வரின் இல்லத்திற்கு, ஒரு லட்சம் கருப்பு அஞ்சல் அட்டைகளை அனுப்ப உள்ளோம்.
அதன்பிறகும்,  தி.மு.க., அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், ஜனவரி, 2ல் மாவட்ட தலைநகர்களில், கருப்பு 'பேட்ஜ்' அணிந்து, மவுன ஊர்வலம், பிப்., 2ல் சென்னையில் பெருந்திரள் முறையீடும் மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

