சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு முதல் நாளில் 3.85 லட்சம் பேர் பயணம்
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு முதல் நாளில் 3.85 லட்சம் பேர் பயணம்
ADDED : ஜன 13, 2024 05:46 AM

சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து நேற்று, 3.58 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதனால், கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரும், 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வசித்து வரும் பல லட்சக்கணக்கனோர், நேற்று முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கி உள்ளனர். இதற்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அறிவித்தபடி, சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் இருந்து, ஏற்கனவே அறிவித்தப்படி சிறப்பு பஸ்கள் பிரித்து இயக்கப்பட்டன.
சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும், 2,100 பஸ்களோடு, 901 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் சிறப்புக் கவனம்செலுத்தினர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில், வழக்கமாக செல்லும் விரைவு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.
முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க, பயணியர் கூட்டம் அலைமோதியது. இதனால், அவர்களை போலீசார் வரிசையில் நிறுத்தி அனுப்பினர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, செங்கோட்டை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில், கூட்டம் அதிகமாக இருந்தது. பயணியர் உடைமைகளில் சோதனை நடத்திய பிறகே, உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் மட்டும், 3.85 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர்.