தென்சென்னையில் மும்முனையில் முட்டிமோதும் ‛‛முத்தமிழ்''
தென்சென்னையில் மும்முனையில் முட்டிமோதும் ‛‛முத்தமிழ்''
UPDATED : மார் 25, 2024 01:30 PM
ADDED : மார் 25, 2024 12:08 PM

சென்னை: தென் சென்னை லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன், பா.ஜ., சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ச்செல்வி என மூவரும் களமிறங்குகின்றனர்.
தேர்தல் என வந்துவிட்டாலே, வாக்காளர்களை குழப்புவதற்காக ஒரே பெயரில் சுயேட்சை வேட்பாளர்களை களமிறக்குவது பழைய 'டெக்னிக்'. அதாவது, ராமசாமி என்ற வேட்பாளர் நின்றுவிட்டால், மற்ற கட்சிகள் சார்பிலோ அல்லது சுயேட்சையாகவோ அதே பெயருடன் கூடிய நபர்களை அதே தொகுதியில் களமிறக்குவார்கள். இதனால் பெயரை பார்த்து ஓட்டளிக்கையில் குழப்பம் ஏற்படுத்தி ஓட்டை பிரிக்க பயன்படுத்தும் யுக்தி.
இதெல்லாம் முன்பு நடந்தாலும், தற்போது நடைபெற உள்ள லோக்சபா தேர்தலிலும் இதேபோன்ற பாணியை கையில் எடுத்துள்ளனர் கட்சிகள். சில நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர்கள் பட்டியலில் தென் சென்னை லோக்சபா தொகுதியில் தற்போது எம்.பி.,யாக இருக்கும் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது.
இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் முன்னாள் மாநில தலைவரும், தெலுங்கானா, புதுச்சேரியின் முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் தென் சென்னை தொகுதியில் தமிழ்ச்செல்வி என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரே தொகுதியில் 'தமிழ்' பெயரை கொண்ட மூன்று பேர் போட்டியிடுவது ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

