ADDED : ஜன 30, 2026 07:14 AM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு கொடுத்து மது வாங்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அடுத்துள்ள சித்தலபாடி கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு, கடந்த 27ம் தேதி இரவு, சிலர் கள்ள நோட்டு கொடுத்து மது வாங்கி சென்றுள்ளனர். சந்தேகமடைந்த கடை மேற்பார்வையாளர் செழியன் அண்ணாமலை நகர் போலீசில் புகார் அளித்தார்.
சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப் உத்தரவுபடி, இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அப்போது, உத்தமசோழமங்களத்தை சேர்ந்த அண்ணாமலை, 52; முருகேசன், 52; உசுப்பூரை சேர்ந்த மகேஷ், 42; சிதம்பரம் அம்மாபேட்டையை சேர்ந்த மணிகண்டன்,46; ஆகியோர் டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டு கொடுத்து மது வாங்கியது தெரியவந்தது. அதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் தலா 2 கைப்பற்றப்பட்டது. அவர்களுக்கு, பெங்களூரில் இருந்து கள்ள நோட்டு வருவதாகவும், டாஸ்மாக் கடைகளில் இரவு நேரங்களில் அதை கொடுத்து மது வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, வேறு எந்ததெந்த கடைகளில் கள்ளநோட்டு கொடுத்து மது வாங்கப்பட்டது என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

