இ.சி.ஆரில் பெண்களை துரத்திய கல்லுாரி மாணவர்கள் 4 பேர் கைது
இ.சி.ஆரில் பெண்களை துரத்திய கல்லுாரி மாணவர்கள் 4 பேர் கைது
ADDED : ஜன 31, 2025 10:29 PM
சென்னை:சென்னை, இ.சி.ஆர்., சாலையில், முட்டுக்காடு பகுதியில் அதிகாலை, 2:00 மணிக்கு காரில் சென்ற பெண்களை, தி.மு.க., கொடி கட்டிய இரண்டு கார்களில் துரத்திச் சென்று, வழி மறித்து ரகளை செய்த, கல்லுாரி மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் நேற்று கூறியதாவது:
கடந்த, 25ம் தேதி அதிகாலையில், காரில் சென்ற தங்களை, இரண்டு கார்களில் வாலிபர்கள் துரத்தியதாக, கானத்துாரை சேர்ந்த, 26 வயது பெண், மறுநாள், 26ம் தேதி புகார் அளித்தார். உடனடியாக அவருக்கு, சி.எஸ்.ஆர்., எனப்படும் புகார் மனு ஏற்பு ரசீது வழங்கப்பட்டு விசாரணை துவக்கப்பட்டது.
ஆறு தனிப்படைகள் அமைத்து சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில், கட்சி கொடி கட்டிய, 'டாடா சபாரி கார் மற்றும் மஹிந்திரா தார்' ஜீப்பில், பெண்கள் சென்ற காரை துரத்திய காட்சிகள் பதிவாகி இருந்தன. இச்சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
பெண்களை துரத்திய இரண்டு கார்களும், இரும்புலியூர், பெருங்களத்துாரில் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த கார்களை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தினோம். அப்போது, அந்த வாகனங்கள், 2010 மற்றும், 2011ல் வாங்கப்பட்டது தெரியவந்தது.
டாடா சபாரி காரின் உரிமையாளர் கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பதும், அவரிடம் இருந்து அனிஷ் என்பவர் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. ஆனால், அந்த கார் அவரின் பெயரில் பதிவு செய்யப்படாமல் உள்ளது.
இந்த காரை, இரும்புலியூரைச் சேர்ந்த சந்துரு, 26 என்பவர் பயன்படுத்தி வருவதும், அவர் காரை பல மாதங்களாக அனிஷிடம் ஒப்படைக்காமல் ஏமாற்றி வருவதும் தெரியவந்தது.
'மஹிந்திரா தர்' ஜீப், நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமானது என்பதும், அவரின் மகன் சென்னையில் உள்ள, கல்லுாரி ஒன்றில் படித்து வருவதும் தெரியவந்தது. அதேபோல, சந்துரு, தனியார் கல்லுாரி ஒன்றில் பட்டய பொறியியல் படிப்பு படித்துள்ளார். நிரந்தர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்.
அவர் மீது, சென்னை போலீசில் ஆள் கடத்தல் மற்றும் பணமோசடி தொடர்பான வழக்குகள் இருப்பதும், அதில் கைதாகி ஜாமினில் வெளிவந்ததும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், இவரும், கல்லுாரி மாணவர்கள் ஆறு பேரும், பெண்களை இரண்டு கார்களில் துரத்தியது தெரியவந்தது. அதில், ஒருவர் வெளி மாநில கல்லுாரி ஒன்றில் படித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, கல்லுாரி மாணவர்கள் சந்தோஷ், தமிழ்க்குமரன், அஸ்வின், விஸ்வேஸ்வர் ஆகியோர், நேற்று கைது செய்யப்பட்டு உள்ளனர். வெளியூரைச் சேர்ந்த இவர்கள், விடுதியில் தங்காமல் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர்.
பெண்கள் சென்ற கார், தங்களின் கார்களில் இடித்ததால் துரத்திச் சென்றதாக கூறுகின்றனர். அப்படி இடித்தது போல தெரியவில்லை. அந்த பெண்களில் ஒருவர் தன் குழந்தை அழுததால், முட்டுக்காடு வரை காரில் அழைத்துச் செல்லலாம் என, அந்த நேரத்தில் சென்றுள்ளனர். பாலியல் ரீதியான தொல்லைக்கு பெண்கள் துரத்தப்படவில்லை என, விசாரணையில் தெரியவந்துள்ளது.
போக்குவரத்து போலீசாரின் சோதனையில் இருந்து தப்பிக்கவும், 'டோல்கேட்' கட்டணத்தை தவிர்க்கவும், காரில் கட்சிக்கொடி கட்டப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.