ADDED : பிப் 07, 2025 12:52 AM
சென்னை:'மற்ற துறைகளில் செய்யக்கூடிய வேலைகளை, கூட்டுறவுத் துறை ஊழியர்கள் தலையில் கட்டுவதை, உயரதிகாரிகள் தடுத்து நிறுத்தாதது ஏன்?' என, ரேஷன் கடை ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தினேஷ் அறிக்கை:
அம்மா மருந்தகம் உள்ள நிலையில், தற்போது புதிதாக, தமிழகம் முழுதும் கூட்டுறவுத் துறையில், 'முதல்வர் மருந்தகங்கள்' துவக்கப்பட உள்ளன. இந்த பணிக்கு, சுகாதாரத்துறை உள்ளது; இதற்கு, அமைச்சர் சுப்பிரமணியன் இருக்கிறார்.
ரேஷன் கடைகளில், வேட்டி - சேலை வினியோகம்... இது, வருவாய்த் துறை பணி; இதற்கு அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளார்.
பண்ணை பசுமை காய்கறி கடைகளில், தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன... இதற்கு வேளாண் துறை உள்ளது; அமைச்சர் பன்னீர்செல்வம் இருக்கிறார்.
மகளிர் உரிமைத் தொகை தொடர்பான வேலைகளை செய்ய, நகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்ற நிலையில், விண்ணப்ப படிவங்களை ரேஷன் ஊழியர்கள் வாயிலாக வழங்கினர். நகராட்சி துறைக்கு நேரு அமைச்சர்.
இந்த துறைகளின் வேலைகளை, கூட்டுறவு துறையின் கீழ் கொண்டு வருவது, எந்த வகையில் நியாயம்? ஏற்கனவே, உணவுத்துறைக்கு சக்கரபாணி, கூட்டுறவுத்துறைக்கு பெரியகருப்பன் அமைச்சர்களாக உள்ளனர்.
இரண்டையும் ஒரு துறையின் கீழ் கொண்டு வரும் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி நிலுவையில் உள்ளது. மற்ற துறைகளின் வேலைகளை, கூட்டுறவுத் துறை ஊழியர்களின் தலையில் கட்டுவது நியாயமற்றது. இதை துறை உயரதிகாரிகள் தடுத்து நிறுத்தாமல் மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

