கொலை வழக்கில் பெயர் சேர்த்ததால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி
கொலை வழக்கில் பெயர் சேர்த்ததால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி
ADDED : ஜூலை 12, 2011 12:29 AM
திருவாரூர் : கொலுமாங்குடி வி.சி., பிரமுகர் கொலை வழக்கில் பேரளம் தி.மு.க., நகர செயலாளர் பன்னீர்செல்வம் குடும்பத்தினரை சேர்த்ததால் அவர் மனைவி உள்ளிட்ட நான்கு பெண்கள் விஷம் குடித்தனர்.
திருவாரூர் மாவட்டம், பேரளம் தண்டத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (57). இவர் பேரளம் தி.மு.க., நகர செயலாளராக உள்ளார். மா.கம்யூ., மாவட்ட துணை செயலாளர் நாவலன் கொலை வழக்கில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 10 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கடந்த மாதம் ஐகோர்ட் உத்தரவுப்படி ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொலுமாங்குடி விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சாமிநாதன் கொலை வழக்கில் தி.மு.க., நகர செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் அவர் மகன்கள், உறவினர்கள் சம்பந்தப்பட்டதாக வந்த புகாரை அடுத்து பேரளம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் மனைவி சுசிலா(52), அவர் மகன் காளீஸ்வரன் மனைவி லதா (31), உறவினர்கள் முத்து வைரவன் மனைவி ரபி மலர் (27), ஸ்டாலின் மனைவி ரேவதி (25) ஆகிய 4 பேர் விஷம் குடித்துள்ளனர். மயங்கிய நிலையில் கிடந்த அவர்களை, உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் திருவாரூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.