பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம்; ஏ.ஐ., வாயிலாக தடுக்க வேண்டும்: ஐகோர்ட்
பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம்; ஏ.ஐ., வாயிலாக தடுக்க வேண்டும்: ஐகோர்ட்
ADDED : ஆக 20, 2025 05:09 AM

சென்னை : 'இணையதளங்களில் பெண்களின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக தடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்' என, தமிழக டி.ஜி.பி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் வழக்கறிஞர், தன் கல்லுாரி காலத்தில் ஆண் நண்பருடன் காதல் வயப்பட்டார். அப்போது, அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள், புகைப்படங்கள் இணையதளங்களில் பரப்பப்பட்டு இருந்தன. ஆபாச வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோக்களை நீக்க, உரிய நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பெண் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, ''பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள், இன்னும் எட்டு இணையதளங்களில் தொடர்ந்து உள்ளன. தமிழகத்தில், 'ஆன்லைன்' பண மோசடிகளை தடுக்க, ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக, சைபர் கண்காணிப்பு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல, பெண்களின் ஆபாச வீடியோ, புகைப்படங்கள் பதிவேற்றம் செய்வதை, உடனே கண்டறிந்து தடுக்கும் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
டி.ஜி.பி., சார்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஏ.கோகுலகிருஷ்ணன் ஆஜராகி, ''இதுவரை, 93 வீடியோ இணைப்புகள் முடக்கப்பட்டு உள்ளன. தற்போது வழங்கப்பட்ட எட்டு இணைப்புகளும் முடக்கப்படும்,'' என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்ட எட்டு இணையதளங்களில் பகிரப்பட்டு வரும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்களை அகற்ற நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையை டி.ஜி.பி., தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல, ஆன்லைன் பண மோசடிகளை தடுக்க, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உருவாக்கிய சைபர் கண்காணிப்பு நடைமுறையை, பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பகிரப்படுவதையும் தடுக்க பயன்படுத்துவது குறித்து, டி.ஜி.பி., பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, வரும் 28ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.