ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்ப்பு கல்லுாரி முதல்வர் உட்பட 4 பேர் கைது
ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்ப்பு கல்லுாரி முதல்வர் உட்பட 4 பேர் கைது
ADDED : ஜூன் 19, 2025 12:44 AM

சென்னை:ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து, ரகசிய பயிற்சி அளித்தது தொடர்பாக, அரபி கல்லுாரி முதல்வர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2022ல், கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதை நிகழ்த்திய, அதே பகுதியைச் சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இதுகுறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும், கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, கோவை குனியமுத்துார் பகுதியில் உள்ள மெட்ராஸ் அரபி கல்லுாரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அவற்றை ஆய்வு செய்த போது, ஜமேஷா முபின் கூட்டாளிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து, கோவை அரபி கல்லுாரியில், பயங்கரவாத செயலுக்கு ரகசிய பயிற்சி அளித்தது தெரியவந்தது. மேலும், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியிலும் ஆயுத பயிற்சி அளித்துள்ளனர்.
இது தொடர்பாக, கோவை அரபி கல்லுாரி முதல்வர் அகமது அலி, அக்கல்லுாரி ஊழியர் ஜவஹர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் ேஷக் தாவூத், ராஜா அப்துல்லா ஆகியோரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

