முந்தி செல்ல முயன்றபோது விபத்து டிராக்டர் மீது கார் மோதி 4 பேர் பலி
முந்தி செல்ல முயன்றபோது விபத்து டிராக்டர் மீது கார் மோதி 4 பேர் பலி
ADDED : பிப் 23, 2024 02:41 AM

கீழ்பென்னாத்துார்: விழுப்புரம் மாவட்டம், கப்ளாம்பாடியை சேர்ந்த மருந்து கடை ஊழியர் பாண்டியன், 25. இவரது தங்கை கலைச்செல்வி, 23, என்பவருக்கு நேற்று காலை, விழுப்புரம் மாவட்டம், கடலாடி குளத்திலுள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்திற்கு வேண்டிய பொருட்களை திருவண்ணாமலையில் வாங்கினர்.
அவற்றை, 'மாருதி சுசூகி ஸ்விப்ட்' காரில், பாண்டியன் மற்றும் அவரது நண்பர்களான, விழுப்புரம் அழகன், 38, வேலுார் பிரகாஷ், 34, திருவள்ளூர் சிரஞ்சீவி ஆகியோர், நேற்று அதிகாலை, 2:50 மணிக்கு கடலாடிகுளத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
காரை பாண்டியன் ஓட்டினார். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த சோமாசிபாடிபுதுாரில், கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால், திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகையை சேர்ந்த பூங்காவனம், 45, என்பவர் அவ்வழியாக டிராக்டர் ஓட்டி சென்றார். அவரை முந்திச்செல்ல பாண்டியன், காரை வேகமாக ஓட்டினார். அப்போது, டிராக்டர் மீது கார் மோதியது.
இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பாண்டியன் மற்றும் நண்பர்கள் மூன்று பேரும் பலியாயினர். டிராக்டர் டிரைவர் பூங்காவனம் படுகாயத்துடன், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து, கீழ்பென்னாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.