பட்டாவில் தவறான பெயரை மாற்ற 4 ஆண்டா? கலெக்டர் செயல்பாடு மீது ஆணையம் அதிருப்தி
பட்டாவில் தவறான பெயரை மாற்ற 4 ஆண்டா? கலெக்டர் செயல்பாடு மீது ஆணையம் அதிருப்தி
ADDED : அக் 25, 2025 10:00 PM
சென்னை: 'பட்டாவில் தவறான பெயர் பதிவானது தொடர்பான புகாரில், நான்கு ஆண்டுகளாக இறுதி உத்தரவு பிறப்பிக்காத, மாவட்ட கலெக்டர் அலுவலக பொதுத் தகவல் அலுவலரின் பதில் ஏற்கும்படியாக இல்லை' என, மாநில தகவல் ஆணையம் கண்டித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன்.
இவர், கடந்த 2021ம் ஆண்டில், வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பிய புகாரில், பனைமரத்துப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட பட்டாவில், வேலுசாமி என்பதற்கு பதிலாக, மணி என்பவரது பெயர் பதிவாகியிருப்பதாக புகார் கூறியிருந்தார்.
தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தான் அளித்த புகார் மனு மீதான நடவடிக்கை குறித்து தகவல் கோரியுள்ளார்.
இது தொடர்பான விசாரணையில் ஆஜரான பத்மநாபன், 'என் புகார் மனு மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல், இதுநாள் வரை வழங்கப்படவில்லை. உரிய தகவலை வழங்க உத்தரவிட வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
பொதுத் தகவல் அலுவலர் கூறுகையில், 'அந்த மனு, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கையில் உள்ளதாக, கடந்த ஆண்டு அக்டோபரில் கடிதம் வாயிலாக தகவல் வழங்கப்பட்டு உள்ளது' என்றார்.
இந்நிலையில், இரு தரப்பினரையும் விசாரித்த பின், மாநில தகவல் ஆணையர் தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவு:
புகார் அளித்து நான்கு ஆண்டுகள் ஆகியும், அதன் மீது இறுதி ஆணை பிறப்பிக்கப்படவில்லை என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் கூறியதை, ஏற்க இயலவில்லை.
எனவே, 60 நாட்களுக்குள், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர், புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டும். அது குறித்த தகவலை, மனுதாரருக்கு அனுப்ப வேண்டும்.
அதற்கான அறிக்கையை, அடுத்த ஆண்டு ஜன., 6ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், முன்னாள் மற்றும் இந்நாள் பொதுத் தகவல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

