ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 3 ஆண்டுகளுக்கு பின் தணிக்கை: குமுறும் காப்பாளர்கள்
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 3 ஆண்டுகளுக்கு பின் தணிக்கை: குமுறும் காப்பாளர்கள்
ADDED : அக் 25, 2025 10:00 PM
மதுரை: ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மூன்றாண்டுகளுக்கு பின் தணிக்கை நடத்துவதால், பில்களை பராமரிக்க இயலாமல் பாதிக்கப்படுவதாக விடுதி காப்பாளர்கள் புலம்புகின்றனர்.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், 1,298 மாணவ - மாணவியர் விடுதிகள் செயல்படுகின்றன. இவ்விடுதிகளில் ஆண்டுதோறும் அகத்தணிக்கை என்ற பெயரில், உணவு உள்ளிட்ட செலவின கணக்குகளை சரிபார்ப்பர்.
2022ம் ஆண்டுக்கு பின், மூன்று ஆண்டுகளாக தணிக்கை செய்யவில்லை; இந்தாண்டு நடக்கிறது. விடுதி காப்பாளர்கள், மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாரிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைத்துள்ளனர்.
விடுதிகளில் மாணவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்கியதும், ஒரிஜினல் ரசீதுகளை, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு காப்பாளர்கள் அனுப்புவர். அதன் பிரதியை வைத்து கணக்குகளை எழுதிய பின், அவற்றையும் அந்த அலுவலகத்திற்கே அனுப்பி விடுவர்.
மன உளைச்சல்
அவர்கள் வசம் கணக்கு நோட்டுகள் மட்டுமே இருக்கும். தனி தாசில்தார்கள் தங்கள் வசம் இருக்கும் ஒரிஜினல் ரசீதை, கருவூலத்திற்கு அனுப்பி பணத்தை பெறுவர். எனவே, காப்பாளர்கள் அனுப்பும் ரசீதுகளின் பிரதிகளையே கோப்புகளாக பராமரிப்பர்.
இவ்வகையில், மூன்று ஆண்டுகளுக்கான ரசீதுகள் தங்களிடம் இல்லாத போது, அவற்றை கொண்டு வந்து தர வேண்டும் என தணிக்கை அலுவலர்கள் கறார் காட்டுகின்றனர். வழங்காவிட்டால் அபராதம், நடவடிக்கை எடுப்பர் என்பதால், காப்பாளர்கள் மன உளைச் சலில் புலம்புகின்றனர்.
விடுதி பணியாளர் ஒருவர் கூறியதாவது:
ஆண்டுதோறும் தணிக்கை செய்தால் தணிக்கை அலுவலருக்கும், காப்பாளர்களுக்கும் எளிதாக இருக்கும். ஏனெனில், உணவுப் பொருட்கள் வாங்கிய ஒரிஜினல் ரசீது தனி தாசில்தாரிடமும், மற்றொரு பிரதி காப்பாளர் வசமும் இருக்கும்.
தொகையை பெறுவதற்காக தனி தாசில்தார் ஒரிஜினல் பில்லை கருவூலத்திற்கு அனுப்பி விடுவதால், எங்களிடம் உள்ள பிரதிகளை பெற்று பைல் செய்து கொள்வர்.
பாதிப்பு வராது
ஆதிதிராவிடர் நலத் துறை யில் பணியாற்றுவோரில் பலர் வருவாய் துறையினர். அவர்கள் அடிக்கடி இடமாறுதலில் சென்று விடுகின்றனர். புதிதாக வருவோர் பில்கள், ரசீதுகளை சரிவர பராமரிப்பதில்லை. கணக்கு நோட்டுகளை காட்டினால், தணிக்கையாளர்கள் ஏற்க மறுத்து எங்களை ஊழல்வாதிகள் போல பார்க்கின்றனர்.
இத்தணிக்கைக்காக வழக்கமான பணிகளை விட்டு விட்டு செல்ல வேண்டியுள்ளது. மழை நேரத்தில் விடுதியை கவனிப்பதா, தணிக்கைக்கு நேரத்தை செலவிடுவதா என்று தெரியவில்லை. தணிக்கை பணியை மழைக்காலம் தவிர்த்து, கோடை விடுமுறை காலத்தில் நடத்தினால் யாருக்கும் பாதிப்பு வராது.
இவ்வாறு அவர் கூறினார்.

