பிரதமரை சந்திக்க 40 இளைஞர்கள் தேர்வு; போட்டி நடத்துகிறது நேரு யுவகேந்திரா
பிரதமரை சந்திக்க 40 இளைஞர்கள் தேர்வு; போட்டி நடத்துகிறது நேரு யுவகேந்திரா
ADDED : நவ 25, 2024 07:41 AM
சென்னை : பிரதமரை சந்திப்பதற்கான 40 இளைஞர்களை தேர்வு செய்ய நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட இயக்கம் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநர் செந்தில்குமார் அளித்த பேட்டி:
தேசிய இளைஞர் தினத்தை ஒட்டி நேரு யுவகேந்திரா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட இயக்கம் சார்பில் 'வளர்ச்சி அடைந்த பாரதம்: இளம் தலைவர்கள் உரையாடல்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அரசியல் பின்புலமற்ற, ஒரு லட்சம் இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களை அரசியலில் ஈடுபடச் செய்வதே இதன் நோக்கம். இதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுவோர் பிரதமரை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
தமிழகத்தில் நடக்க உள்ள போட்டியில் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட தமிழக இளைஞர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் 'மை பாரத்' இணையதளத்தில் இன்று முதல் டிசம்பர் 5ம் தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
முதற்கட்டமாக அனைவருக்கும் டிஜிட்டல் முறையில் வினாடி வினா போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவோர் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெறுவர்.
இரண்டாம் சுற்று போட்டிகள் டிச.8 முதல் 15ம் தேதி வரை நடக்கும். இதில் வழங்கப்படும் 10 தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியாளர்கள் டிஜிட்டல் முறையில் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். அதன் வாயிலாக தேர்வு செய்யப்படும் 1000 இளைஞர்கள் மாநில அளவிலான விளக்கக்காட்சி சமர்ப்பித்தல் சுற்றுக்கு தகுதி பெறுவர். இரண்டாம் சுற்றில் தேர்வு செய்த தலைப்புகளின் அடிப்படையில் விளக்கக்காட்சி அமைய வேண்டும்.
மூன்றாம் சுற்றில் ஒரு தலைப்பிற்கு நான்கு நபர்கள் என 40 இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் ஜன.11, 12ம் தேதி டில்லியில் நடக்கும் 'வளர்ச்சி அடைந்த பாரதம் தேசிய சாம்பியன்ஷிப் - 2025' போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
ஜனவரி 11ம் தேதி டில்லி பாரத் மண்டபத்தில் நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணியில் இடம் பெற்றவர்கள் பிரதமரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெறுவர். அவர்கள் பிரதமர் மோடியிடம் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.