ADDED : ஜன 03, 2026 02:09 AM

சென்னை: பணிக்கு வருவதில் காலதாமதம், சீருடைகளை சரியாக அணியாதது, முடி வெட்டாதது, முக சவரம் செய்யாதது போன்ற தவறுகளுக்காக, கடந்த ஆண்டில், 4,000 போலீசாருக்கு மிகச்சிறிய தண்டனைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
சீருடை பணியாளர்களான போலீசாருக்கு, அவர்கள் செய்யும் தவறுகளுக்கு மிகச்சிறிய, சிறிய மற்றும் பெரிய என, மூன்று வகையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மிகச்சிறிய தண்டனைக்குரியவையாக, பணிக்கு வருவதில் காலதாமதம், சீருடையை சரியாக அணியாதது, முடி வெட்டாதது, முக சவரம் செய்யாதது உள்ளிட்ட தவறுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
போலீசார் செய்யும் மிகச்சிறிய தவறுகளுக்கு வழங்கப்படும் தண்டனையை எதிர்த்து, அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்ய அவர்களுக்கு அனுமதி கிடையாது.
அவர்களுக்கு அதிக நேர காவல் பணி, காவாத்து எனும் அணிவகுப்பு என, மூன்று வகையான பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அவற்றை செய்ய மறுத்தால் பணியை தொடர முடியாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீசார் மீண்டும் அதே தவறுகளை செய்தால், அது குறித்து எஸ்.பி.,க்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் அறிக்கை அளிப்பர். அதன் அடிப்படையில், போலீசாரின் பணி பதிவேட்டில் கரும்புள்ளி வைக்கப்படும். கடந்த ஆண்டில், 4,000த்திற்கும் மேற்பட்ட போலீசாருக்கு மிகச்சிறிய தண்டனைகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

