ADDED : ஜூலை 03, 2026 01:01 AM

சென்னை: தமிழக தகவல் ஆணையத்தில், 40,000க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தமிழக தகவல் ஆணையத்தில், ஒரு தலைமை தகவல் ஆணையர் உட்பட, ஒன்பது தகவல் ஆணையர்கள் பணியாற்றி வருகின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்படும் இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பது, இவர்களின் பொறுப்பு.
பெரும்பாலும் இப்பொறுப்புகளில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வோர் ஆணையருக்கும் தலா மூன்று முதல் ஐந்து மாவட்டங்கள் மற்றும் அரசு துறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
அந்த மாவட்டங்கள் மற்றும் துறைகள் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பது, இவர்களின் முக்கிய பணி.
நிர்வாக சுமை மற்றும் காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட காரணங்களால், சில ஆண்டுகளில், 40,000க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, ஆர்.டி.ஐ., எனும் தகவல் உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், 2023ல் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை, இப்போது தான் அதிகாரிகள் விசாரிக்க தொடங்கி உள்ளனர் என, அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாநில தலைமை தகவல் ஆணையராக, 2023ல் நியமிக்கப்பட்ட முகம்மது ஷகீல் அக்தர், கடந்த 15ம் தேதி பணி ஓய்வு பெற்றார். அவருடன் தகவல் ஆணையர்கள் தாமரைக்கண்ணன், திருமலைமுத்து மற்றும் பிரியகுமார் ஆகியோரும் ஓய்வு பெற்றுள்ளனர்.
வரும் ஆகஸ்டில், தகவல் ஆணையர் நடேசன் ஓய்வுபெற உள்ளார். இதன் வாயிலாக, தலைமை தகவல் ஆணையர் பதவி உட்பட, ஐந்து பணியிடங்கள் காலியாகும் நிலை உருவாகியுள்ளது.
ஆர்.டி.ஐ., சட்டத்தின்படி, தகவல் ஆணையர் பணியிடம் காலியானால், தேர்வுக் குழு அமைக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்குள் புதியவர்களை நியமிப்பது வழக்கம்.
தலைமை தகவல் ஆணை யர் உட்பட மூன்று ஆணையர்கள் ஓய்வுபெற்று, 15 நாட்கள் கடந்தும், புதிய தேர்வுக் குழுவை கூட, தமிழக அரசு நியமிக்காமல் உள்ளது.
எனவே புதிய தேர்வுக் குழுவை நியமித்து, நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகளை விரைந்து விசாரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்.டி.ஐ., ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
