அதிமுக நிர்வாகிகள் அடுக்கடுக்காக புகார்; பதில் தராமல் மவுனம் சாதிக்கும் பழனிசாமி
அதிமுக நிர்வாகிகள் அடுக்கடுக்காக புகார்; பதில் தராமல் மவுனம் சாதிக்கும் பழனிசாமி
UPDATED : ஜூலை 03, 2026 01:03 AM
ADDED : ஜூலை 03, 2026 01:01 AM

சென்னை: அ.தி.மு.க., நிர்வாகிகள் வெளியேற்றம் குறித்தோ, அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தோ, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி, வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நிர்வாகிகள் விலகி, த.வெ.க.,வில் இணைந்து வருகின்றனர். அவர்கள், பழனிசாமியை குறை சொல்லி அறிக்கை வெளியிடுகின்றனர். கட்சிக்குள் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பழனிசாமியை விமர்சிக்கின்றனர்.
தேர்தல் தோல்விக்கு பின், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டி ஆலோசனை நடத்துமாறும் வலியுறுத்தி வருகின்றனர் ஆனால், எதற்குமே பழனிசாமி, இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.
குற்றச்சாட்டு
இது குறித்து, அமைப்பு செயலர்கள் கூறியதாவது: சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., - அ.தி.மு.க., இணைந்து, ஆட்சி அமைக்க முயன்றதாக த.வெ.க.,வும், அவர்களோடு புதிதாக கூட்டணி வைத்த கட்சியினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
அதே குற்றச்சாட்டை, அ.தி.மு.க.,வை விட்டு வெளியேறிய விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் சொல்கின்றனர்; கட்சியில் இருக்கும் சி.வி.சண்முகம், வேலுமணியும் சொல்கின்றனர்.
அது உண்மை இல்லை என்றால், பழனிசாமி வெளிப்படையாக பேசி இருக்கலாம். ஆலோசனை கூட்டங்களில் கூட, வெளியேறுபவர்களை துரோகி என்கிறாரே தவிர, 'அவர்களின் குற்றச்சாட்டு பொய்; அப்படி எதுவுமே நடக்கவில்லை' என, இதுவரை பழனிசாமி சொல்லவில்லை.
இதற்கிடையே, தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன், பழனிசாமி அடிக்கடி பேசி வருகிறார். தற்போது, த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுப்பதாக, செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
அதன் பின்னணியில், தி.மு.க.,வுடன் பழனிசாமியும் இணைந்துள்ளாரோ என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கு ஏற்றார் போல், கடந்த 50 நாட்களாக தி.மு.க.,வை, எந்த இடத்திலும் பழனிசாமி விமர் சனம் செய்யவில்லை.
ஊரே பேசுகிறது
ஒற்றை தலைமை விவகாரத்தின்போது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் உடனுக்குடன் பதிலளித்தார் பழனிசாமி. ஆனால், கடந்த மே 10ம் தேதியிலிருந்து, தி.மு.க., - அ.தி.மு.க., இணைந்து ஆட்சி அமைக்க முற்பட்டதாக ஊரே பேசுகிறது. ஆனால், பழனிசாமி மவுனமாக இருப்பது, கட்சிக்குள் இன்னும் பிரச்னையை கிளப்புகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
