அரசு கையகப்படுத்திய 468 ஏக்கர் நிலம்; உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைப்பு!
அரசு கையகப்படுத்திய 468 ஏக்கர் நிலம்; உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைப்பு!
ADDED : நவ 05, 2024 01:23 PM

கோவை: கோவையில் 40 ஆண்டுக்கு முன் அரசால் கையகப்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்படாத 468 ஏக்கர் நிலம், இன்று (நவ.,05) மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள், பல்லாண்டு காலம் பயன்படுத்தப்படாமல் இருப்பதை காண முடியும். அவ்வாறு பயன்படுத்தப்படாத நிலங்கள், அதன் உரிமையாளர்களுக்கே திரும்பவும் வழங்கப்படுகின்றன. அதன்படி கோவை பீளமேட்டில் இன்று நடந்த நிகழ்ச்சியில், 468 ஏக்கர் நிலம், அதன் உரிமைதாரர்களான 5338 பேருக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலம் அனைத்தும், 1981 முதல் 1995ம் ஆண்டு வரை, வீட்டு வசதி திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டவை. கோவை வீட்டு வசதிப்பிரிவு சார்பில் கையகப்படுத்தப்பட்ட இந்த நிலங்கள், கணபதி, விளாங்குறிச்சி, வீரகேரளம், தெலுங்குபாளையம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, குமாரபாளையம், காளப்பட்டி, உப்பிலிபாளையம் என 9 கிராமங்களில் அமைந்துள்ளன.
நில உரிமையாளர்களுக்கான விடுவிப்பு ஆணைகளையும், தடையின்மை சான்றுகளையும் முதல்வர் ஸ்டாலின் இன்று நவ.,5ல் வழங்கினார். விழாவில், தமிழக வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துச்சாமி, வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் சமீரன், செயலாளர் காகர்லா உஷா, சேர்மன் பூச்சி முருகன், முதன்மை பொறியாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், திரும்பக் கிடைத்திருப்பது அதன் உரிமையாளர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.