ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் 47 பேர் கைது: பா.ஜ., கண்டனம்
ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் 47 பேர் கைது: பா.ஜ., கண்டனம்
ADDED : அக் 03, 2025 12:59 AM

சென்னை: ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவையொட்டி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், சென்னை அய்யப்பன்தாங்கல் அரசு பள்ளி மைதானத்தில், நேற்று காலை குருபூஜை மற்றும் ஷாகா பயிற்சி நடத்தினர்.
அதில், ஆர்.எஸ்.எஸ்., சீருடையில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அங்கு வந்த போலீசார், அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக கூறி, 47 பேரை கைது செய்னர்.
இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பொறுப்பாளர் லோகநாதன் கூறுகையில், ''பள்ளி வளாகத்தில், தொடர்ந்து ஷாகா பயிற்சி செய்து வருகிறோம். ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவையொட்டி, பாரதிய ஜன சங்க நிறுவனர் தீன் தயாள் உபாத்யாய் பிறந்த நாள் சிறப்பு ஷாகா பயிற்சி நடந்தது. இதற்காக, கைது செய்துள்ளனர்,'' என்றார்.
கைது செய்யப்பட்டோரை சந்திக்க முயன்ற முன்னாள் கவர்னர் தமிழிசைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பின், அவர் அளித்த பேட்டியில், ''அமைதியான முறையில் பயிற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது.
''அவர்கள், எவ்வித சமூக விரோத செயல்களிலும் ஈடுபடவில்லை. கஞ்சா, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏன்? பலர் ஒன்றிணைந்து உடற்பயிற்சி செய்வதற்கு கூட, போலீஸ் அனுமதி வாங்க வேண்டும் என்பது அராஜகம்,'' என்றார்.
இந்த கைதை கண்டித்து, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
நாகேந்திரன்: ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை முடக்க துரிதமாக இயங்கும் தி.மு.க., அரசின் இரும்புக்கரம் , குற்றங்களை தடுப்பதிலும், குற்றவாளிகளை பிடிக்கும்போதும் மட்டும் துருப்பிடித்து இருப்பது ஏன்? தன்னலம் கருதாது தேசநலப் பணிகளில் நுாறாண்டு காலமாக தங்களை இணைத்துக் கொண்டு சேவையாற்றும் தேசியவாதிகளை வழக்குகளாலும், கைதுகளாலும் முடக்கிவிட முடியாது.
அண்ணாமலை: கடந்த ஆண்டும் இதேபோல ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு தடை விதிக்க எல்லா வழியிலும் முயற்சித்த தி.மு.க., அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு வைத்தது. வருங்காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி மறுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
அதையும் மீறி, போலீஸ் கைது செய்திருப்பது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல். இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டுகளை, தி.மு.க., அரசு தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.