UPDATED : ஜூன் 27, 2024 11:43 PM
ADDED : ஜூன் 27, 2024 11:37 PM

சென்னை, ஜூன் 28- தமிழக குவாரிகளில் மணல் அள்ளியதில், மூன்றே ஆண்டுகளில் 4,730 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக டி.ஜி.பி.,யிடம் மத்திய அரசின் அமலாக்கத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
தமிழக அரசு பொதுப்பணி துறையில் இருந்து, நீர்வளம் தனியாக பிரிக்கப்பட்டு, அந்த துறையின் அமைச்சராக துரைமுருகன் பணி செய்கிறார். ஆற்று மணல் அள்ளி விற்க குவாரிகள் உருவாக்கி நடத்த அனுமதி அளிப்பது நீர்வள துறை தான்.
அதற்கான ஒப்பந்த பணிகளை, புதுக்கோட்டை முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த, எஸ்.ஆர்., என அழைக்கப்படும் எஸ்.ராமச்சந்திரன் கவனித்து வந்தார்.
விதிகள் மீறல்
அவரது உறவினரும், திண்டுக்கல் தொழில் அதிபருமான ரத்தினம், புதுக்கோட்டை கரிகாலன் ஆகியோர், குவாரிகளில் இருந்து மணல் எடுத்து யார்டுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மாநிலம் முழுதும் வினியோகிக்கும் அரசு ஒப்பந்ததாராக செயல்பட்டு வந்தனர்.
கரிகாலன், கல் குவாரிகளில் கிராவல் அள்ளி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.
இந்த மூவருக்கும் அதிகார மையங்களுடன் நேரடி தொடர்பு இருந்ததால், மணல் எடுப்பது, விற்பது போன்ற விஷயங்களில் விதிகளை மீறினாலும், அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என நீண்டகாலமாக புகார்கள் கூறப்பட்டன. இதனால், ஒவ்வொரு குவாரியிலும் அரசு நிர்ணயித்த அளவை காட்டிலும் பல மடங்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு விற்கப்பட்டது.
![]() |
ஆறு மாவட்டங்களில் மணல் குவாரிகளிலும், ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோரின் வீடு, அலுவலகம், கல்லுாரிகளிலுமாக 34 இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நீர்வள துறை அலுவலகத்திலும் பல ஆவணங்களை எடுத்தனர்.
கண்டுபிடித்தனர்
'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் உதவியுடன், குவாரிகளில் 'டிஜிட்டல்' கருவிகள் வாயிலாக ஆய்வு செய்தபோது, ஒவ்வொரு நாளும் எவ்வளவு மணல் குறைந்து கொண்டே வந்தது என்பது செயற்கைக்கோள் படங்களில் துல்லியமாக வெளிப்பட்டது.
இதன் வழியாக கொள்ளை அடிக்கப்பட்ட மணல் எத்தனை டன் என்பதை கண்டுபிடித்தனர்.
கான்பூர் ஐ.ஐ.டி., நிபுணர்கள் உதவியுடன் அதே குவாரிகளில் ஆய்வு நடத்தி, மணலுக்கு அரசு நிர்ணயம் செய்த விலை அடிப்படையில் கணக்கிட்டபோது, அமலாக்க துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
விதிகளின்படி எடுத்த மணல், விற்ற மணல், வசூலித்த தொகை எல்லாம் தவிர்த்து, எந்த கணக்கிலும் வராத தொகை மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் என்பது தான் அவர்களை அதிரவைத்த தகவல்.
ஒன்பது மாதங்கள் நடத்திய தொடர் விசாரணையில், மணல் கொள்ளையர்கள் சுருட்டிய தொகை 4,730 கோடி ரூபாய் என்று அமலாக்க துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோருக்கு சொந்தமான, 130 கோடி ரூபாய் சொத்துக்களும் 35 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. 128.34 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ராட்சத மணல் அள்ளும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். நீர்வளத் துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையாவிடம் இரண்டு நாட்கள் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.
அதன் அடிப்படையில், மணல் கொள்ளையை தடுக்க தவறிய, 10 மாவட்ட கலெக்டர்களுக்கு, 'சம்மன்' அனுப்பினர். திருச்சி, கரூர், தஞ்சாவூர், வேலுார், அரியலுார் மாவட்ட கலெக்டர்களை தனித்தனியாக இரண்டு மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஏறத்தாழ ஓராண்டாக புலனாய்வில் திரட்டிய தகவல்களை தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜிவாலுக்கு அமலாக்க துறை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் 28 குவாரிகளில் மணல் அள்ள, நீர்வள துறையிடம் அனுமதி பெற்றுள்ளனர். ஒப்பந்தப்படி, 490 ஏக்கரில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 2,450 ஏக்கருக்கு மேல் மணல் அள்ளினர்.
நீர்வள துறையின் பதிவேட்டில், 4.05 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டதாக பதிவாகி உள்ளது. பொறியாளர்களும் இதையே வாக்குமூலமாக தெரிவித்தனர். ஆனால், 'இஸ்ரோ' விஞ்ஞானிகள், கான்பூர் ஐ.ஐ.டி., நிபுணர்கள் நடத்திய அறியல் பூர்வமான ஆய்வில், 27.70 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டது உறுதியானது. அதாவது, 24 லட்சம் யூனிட்டிற்கு மேல் மணல் கொள்ளை நடந்துள்ளது.
மணல் விற்றதால் அரசுக்கு கிடைத்த வருவாய் 36.45 கோடி; ஆனால், கணக்கில் வராமல் சுருட்டிய தொகை 4,730 கோடி ரூபாய். நீர்வள துறை அதிகாரிகள், துறையின் முக்கிய புள்ளிகள் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மணல் கொள்ளை தொடர்பாக, தமிழகத்தில் உள்ள, பல காவல் நிலையங்களில் புகார்கள் பதிவாகியும், காவல் துறையினர் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். இதுபற்றி, டி.ஜி.பி.,க்கு சுட்டிக்காட்டி உள்ளோம்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


