மேல்மருவத்துாரில் 48 ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்
மேல்மருவத்துாரில் 48 ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்
ADDED : நவ 29, 2024 02:49 AM
சென்னை:தைப்பூச திருவிழாவையொட்டி, டிசம்பர், 14 முதல் பிப்., 12 வரை, 48 விரைவு ரயில்கள், தற்காலிகமாக மேல்மருவத்துாரில் நின்று செல்ல தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
அதன் அறிக்கை:
தைப்பூச திருவிழா, 2025 பிப்.,11ல் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி சுமந்து, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்வர். எனவே, பக்தர்களின் வசதிக்காக, அங்குள்ள ரயில் நிலையத்தில், விரைவு ரயில்கள் தற்காலிகமாக இரண்டு நிமிடம் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, எழும்பூர் -- திருச்சி மலைக்கோட்டை, எழும்பூர் - மன்னார்குடி விரைவு ரயில், டிச., 14 முதல் பிப்., 11 வரை நின்றுசெல்லும்.எழும்பூர் -- மதுரை பாண்டியன், எழும்பூர்- - செங்கோட்டை பொதிகை, தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா, எழும்பூர் -- கொல்லம், எழும்பூர்- - தஞ்சாவூர் உழவன் உட்பட, 23 விரைவு ரயில்கள், டிச., 14 முதல் பிப்., 12 வரை மேல்மருவத்துாரில் நின்று செல்லும்.
இதேபோல், மறுமார்க்கமாக வரும், 25 விரைவு ரயில்களும், மேல்மருவத்துாரில் தற்காலிகமாக நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

