2 முறைக்கு மேல் 'நீட்' தேர்வு எழுதிய 48,954 பேர்: மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பு
2 முறைக்கு மேல் 'நீட்' தேர்வு எழுதிய 48,954 பேர்: மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பு
UPDATED : ஜூலை 26, 2025 06:36 AM
ADDED : ஜூலை 25, 2025 10:16 PM

சென்னை: மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இரு முறைக்கு மேல், 'நீட்' தேர்வு எழுதிய, 48,954 மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 11,063 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், 2025 - 26ம் கல்வியாண்டு சேர்க்கைக்கு, 72,473 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், போலி ஆவணங்கள் சமர்ப்பித்த, 25 பேர் கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீடு, சிறப்பு ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு என்ற அடிப்படையில் தகுதி பெற்ற, 72,194 மாணவர்களின் தரவரிசை பட்டியலை, சென்னையில் நேற்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார்.
தகுதி நீக்கம் மேலும், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில், 572 மதிப்பெண் பெற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த திருமூர்த்தி; 563 மதிப்பெண் பெற்ற கிருஷ்ணகிரியை சேர்ந்த சதீஷ்குமார்; 551 மதிப்பெண் பெற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த மதுமிதா ஆகியோர், முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
பிறப்பு, இருப்பிட சான்றிதழ், உறவு முறை சான்றிதழ் உள்ளிட்டவை போலியாக அளித்த, 25 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உ ள்ளனர். ஒரு தனியார் மருத்துவ கல்லுாரியில், 50 எம்.பி.பி.எஸ்., இடங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. ஆனால், அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடங்கள் குறையவில்லை.
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை வரும், 30ம் தேதி துவங்கும். இந்தாண்டு 60, 67 வயதானவர்களும் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், தரவரிசை பட்டியலில், அவர்கள் தகுதி பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

