UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:15 PM
சென்னை: தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில், செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், தேசிய நலவாழ்வு குழுமம், 4,724 பணியிடங்களை, 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதாக அறிவித்தது.
மாதம், 21,000 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில், இப்பணியிடங்கள் மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு, மாநிலம் முழுதும், 49,000 செவிலியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒப்பந்த அடிப்படையில், தேர்வு செய்யப்படுவதற்கு, சில செவிலியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேநேரம், பணியில் சேர, ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, 49,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு தேர்வானவர்களுக்கு, மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் வாயிலாக, நேற்று முதல் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
